மத்தியபிரதேசத்தில் அடிக்கடி மின்தடை ‘கரண்ட் கட்’ ஆவதற்கு பறவை கூடு காரணமா?...அமைச்சர் மின்மாற்றியில் ஏறியதால் பரபரப்பு

போபால்: மத்திய பிரதேசத்தில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதற்கு பறவைகளின் கூடுதான் காரணம் என்று கூறப்பட்டதால், துறை அமைச்சர் உடனடியாக களத்தில் இறங்கியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் மோதிஜீல் மின்பகிர்மான அலுவலகத்திற்கு அம்மாநில மின்துறை அமைச்சர் பிரதியும்னா சிங் தோமர் ஆய்வுப் பணிக்காக சென்றார். அப்போது, மின் தடை குறித்து மின் நுகர்வோரிடம் இருந்து வரும் புகார்கள் குறித்து அதிகாரிகளிடம் விசாரித்தார். அப்போது அவர்கள், ‘அடிக்கடி மின் தடை ஏற்படுவதற்கு காரணம், மின்கம்பங்களில் பறவைகள் கூடு கட்டுவதாலும், ஓவர் லோடு காரணமாக மின்தடை ஏற்படுகிறது’ என்றனர்.

ஆய்வு கூட்டத்தை முடித்துக் கொண்டு சாலை மார்க்கமாக அமைச்சர் மற்றும் அதிகாரிகள் காரில் சென்றனர். அப்போது, மோதி ஏரிக்கு அருகில் இருந்த மின்மாற்றியில் பறவைக் கூடு ஒன்று இருப்பதை பார்த்து அதிகாரிகளிடம் அமைச்சர் சுட்டிக்காட்டினர். ‘ஒவ்வொரு மாதமும் பராமரிப்பு பணிகளின் போது, இதுபோன்ற பிரச்னைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று அறிவுறுத்தினார். பின்னர், அவர் காரை விட்டு இறங்கி ஒரு ஏணியை கொண்டு வர உத்தரவிட்டார்.

தொடர்ந்து, மின் மாற்றியை ‘ஆப்’ செய்துவிட்டு, ஏணியை அதன் மீது சாயவைத்து அங்கிருந்த பறவையின் கூட்டையும், புதர்மண்டிய பகுதியையும் ஒரு கருவியின் மூலம் அகற்றினார். பின்னர், தான் மின்மாற்றியில் ஏறி பறவையின் கூட்டை அகற்றியதை தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டார். அதில், ‘எனது ஒவ்வொரு பணியையும் அர்ப்பணிப்புடன் செய்கிறேன். யார் என்ன சொல்வார்கள் என்பது பற்றி எனக்கு கவலையில்லை? நாம் எவ்வாறு சிறப்பாக பணியாற்ற முடியம் என்பதே முக்கியம்’ என்று பதிவிட்டுள்ளார்.

Related Stories: