மருத்துவ முதுகலை இறுதி தேர்வை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு: பல்கலைக் கழகங்களே முடிவு எடுக்கலாம்

புதுடெல்லி: ‘முதுகலை மருத்துவ மாணவர்களின் இறுதித் தேர்வுகளை ரத்து செய்யும்படி உத்தரவிட முடியாது’ என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.   கொரோனாவின் 2ம் அலை காரணமாக நாடு முழுவதும் அசாதாரண நிலை நிலவி வருகிறது. இதனால் பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சில தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல், முதுகலை மருத்துவ மாணவர்களின் இறுதித் தேர்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்று மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தனது மனுவில், ‘தேர்வுகளை எழுத வேண்டிய மருத்துவர்கள் கொரோனா சிகிச்சையில் தீவிரமாக இருக்கின்றனர். எனவே, தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்திவைக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.  இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, எம்.ஆர் ஷா தலைமையிலான விடுமுறை அமர்வில் விசாரணைக்கு வந்தது.

தேசிய மருத்துவ கவுன்சில் சார்பாக ஆஜரான கவுரவ் சர்மா, தேர்வை ரத்து செய்யும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பின்னர், நீதிபதிகள் அளித்த தீர்ப்பில், ‘முதுகலை மருத்துவ மாணவர்களின் இறுதித் தேர்வுகளை ரத்து செய்யும்படியோ அல்லது ஒத்திவைக்கும்படியோ பொதுவான உத்தரவை பிறப்பிக்க முடியாது. தேர்வு நடத்துவது தொடர்பாக தேசிய மருத்துவ கவுன்சில் ஏற்கனவே பல்கலைக் கழகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கொரோனா தொற்றை கருத்தில் கொண்டு இறுதித் தேர்வுகளை எப்போது நடத்தலாம் என்பது பற்றியும் கருத்து கேட்டுள்ளது. இதில், உச்ச நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. மாணவர்களுக்கு ஏற்ற பொருத்தமான நேரத்தில் தேர்வு நடத்த மனுதாரர் கோருகிறார். சரியான நேரம் என்பது ஒவ்வொரு தனி மனிதரைப் பொருத்தும் மாறும். அதற்கேற்ற வகையில் எல்லாம் தேர்வை நடத்த முடியாது.

இந்தியா போன்ற பெரிய நாட்டில் மாநிலத்துக்கு மாநிலம் கொரோனா தொற்று பரவலில் வித்தியாசம் உள்ளது. எனவே, தேசிய அளவிலான ஒரு தேதியினையும் உச்ச நீதிமன்றம் தீர்மானிக்க முடியாது. எனவே, தேசிய மருத்துவ கவுன்சிலின் ஆலோசனைப்படி பல்கலைக் கழகங்கள் மட்டுமே இது தொடர்பாக முடிவெடுக்க அதிகாரம் உண்டு,’ என்று தெரிவித்தனர்.

Related Stories: