தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென்னிந்திய காடுகளில் தனி நாடு ஐஎஸ் தீவிரவாதிகள் பயங்கர சதி: என்ஐஏ குற்றப்பத்திரிகையில் பரபரப்பு தகவல்

புதுடெல்லி: தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திராவில் உள்ள காடுகளில் தனி நாடு அமைக்க ஐஎஸ் தீவிரவாதிகள் சதித்திட்டம் தீட்டியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.   கடந்த 2019ம் ஆண்டு சேலம், சென்னையில் போலியாக சிம் கார்டுகள் வாங்கி, அதை தீவிரவாதிகளுக்கு பணம் சேகரித்தல் உள்ளிட்ட சட்டவிரோத பணிகளுக்காக பயன்படுத்தியதாக கடலூரைச் சேர்ந்த காஜா மொய்தீன் மற்றும் லியாகத் அலியை போலீசார் கைது செய்தனர்.  இந்த வழக்கு தேசிய புலனாய்வு (என்ஐஏ) பிரிவுக்கு மாற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து கேரளாவின் திருவனந்தபுரத்தில் முக்கிய ஐஎஸ் தீவிரவாதியான சையது அலி (31) கைது செய்யப்பட்டான்.

  இவர்களுக்கு எதிராக சமீபத்தில் என்ஐஏ, நீதிமன்றத்தில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், ஐஎஸ் தீவிரவாதிகள் தென் இந்திய காடுகளில் தனி நாட்டை அமைத்து நாச வேலைகளில் ஈடுபட சதித்திட்டம் தீட்டியதாக பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.   பெங்களூருவை சேர்ந்த மெகபூப் பாஷா தலைமையில் 20 பேர் கொண்ட தீவிரவாதிகள் குழு இதற்கான ஆயத்த ஏற்பாடுகளை செய்துள்ளது. இவர்கள் கர்நாடகாவின் சிவன்சமுத்ரா பகதிக்கு சென்று அங்கு காட்டில் மறைவான இடத்தை தேர்வு செய்து பயிற்சி தர தயார்படுத்தி உள்ளனர்.   இவர்களில் கேரளாவை சேர்ந்த சையது அலி முக்கிய பங்கு வகித்துள்ளான்.

தொழில்நுட்பத்தில் கைதேர்ந்த இவன், டார்க் வெப் எனப்படும் இணையதள தேடுபொறிக்குள் சிக்காமல் செயல்படும் இணையதளங்கள் மூலமாக வெளிநாடுகளில் உள்ள ஐஎஸ் தீவிரவாதிகளுடன் ஆலோசனைகளை நடத்தி உள்ளான். மேலும், வெளிநாடுகளில் இருந்து அதிநவீன வெடிகுண்டுகளை தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களையும் இந்தியாவுக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்துள்ளான் என என்ஏஐ தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.

தலைவர்களை கொல்ல திட்டம்  

தென் இந்தியா மட்டுமின்றி, மகாராஷ்டிராவின் ரத்னகிரி, கர்நாடகாவின் குடுகு, கோலார், மேற்கு வங்கத்தின் பர்த்வான், சிலிகுரி, ஆந்திராவின் சித்தூர் பகுதிகளில் இவர்கள் தீவிரவாத இயக்கத்திற்கு ஆட்களை நியமித்து பயிற்சியும் அளித்து வந்துள்ளனர். தென் இந்திய காடுகளில் தனி நாடு அமைத்து, இந்து மத தலைவர்கள், அரசியல் முக்கிய புள்ளிகள், போலீஸ் மற்றும் அரசு துறை உயர் அதிகாரிகளை கொல்ல சதித்திட்டம் தீட்டி உள்ளனர்.

Related Stories: