மதுராந்தகத்தில் பெட்ரோல் பங்க் வாட்ச்மேன் குத்தி கொலை: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை

மதுராந்தகம்: மதுராந்தகம் பகுதியில் பெட்ரோல் பங்க்கில் பணியில் இருந்த வாட்ச் மேன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். மதுராந்தகம் அடுத்த மாம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (62). இவர் மதுராந்தகத்தில்  உள்ள பெட்ரோல் பங்க்கில் வாட்ச் மேனாக வேலை செய்து வந்தார். இந்நிலையில், நேற்று இரவு அவர் பணியில் இருந்தபோது,  நள்ளிரவு 12 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டுபேர் திடீரனெ பாலகிருஷ்ணனை கத்தியால் சரமாரி குத்தி உள்ளனர்.

இதில், படுகாயமடைந்த அவர் சத்தம்போட்டு அலறி  துடித்துள்ளார். அவரது சத்தம் கேட்டு அப்பகுதி குடியிருப்பு வாசிகள் ஓடிவந்துள்ளனர்.  இதனைப் பார்த்த மர்ம நபர்கள் பைக்கில் தப்பிச் சென்றுவிட்டனர். அதன் பின்னர், அப்பகுதியினர் பாலகிருஷ்ணனை  மீட்டு சிகிச்சைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், பலனின்றி பாலகிருஷ்ணன் பரிதாபமாக இறந்தார். இவரது உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்த புகாரின்பேரில், மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா   என  பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். நள்ளிரவில் பெட்ரோல் பங்க்கில் நடந்துள்ள இக்கொலை சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories:

>