52 லட்ச ரூபாய் மதுபானம், 2 கிலோ கஞ்சா பறிமுதல்: 10 பேர் கைது

சித்தூர்: கர்நாடகாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.52 லட்சம் மதிப்பிலான மதுபானம், 2 கிலோ கஞ்சா, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். ஆந்திர மாநிலம் சித்தூர் எஸ்பி செந்தில்குமார், கர்நாடக மாநில மதுபானம், கஞ்சா, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் உள்ளிட்டவை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன்படி சித்தூர் நகர டிஎஸ்பி சுதாகர் தலைமையில் 3 தனிப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் போலீசார் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று தவனம்பள்ளி  போலீசார், கொல்லப்பள்ளி கிராஸ் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த இருசக்கர வாகனம், கார் மற்றும் ஆட்டோ ஆகியவற்றை நிறுத்தி சோதனையிட்டனர். அதில், மதுபாட்டில்கள் இருந்தது தெரிய வந்தது. தொடர்ந்து, கார், பைக், ஆட்டோவில் வந்த 6 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த 54 மதுபாட்டில்கள் பாக்ஸ் பறிமுதல் செய்தனர். அதேபோல் காஜுலபள்ளி கிராமம் அருகே போலீசார் சோதனை மேற்கொண்டபோது அவ்வழியாக வந்த கார் மற்றும் மினி வேனை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

அதில், கர்நாடக மாநிலத்தில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மற்றும் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிந்தது. இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர். மேலும், அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் நடத்திய சோதனையில் 2 கிலோ கஞ்சா இருந்தது. தொடர்ந்து, இருசக்கர வாகனத்தில் வந்தவரை போலீசார் கைது செய்து பைக்குடன், கஞ்சாவை பறிமுதல் செய்தனர். நேற்று ஒரே நாளில் 2 இடங்களில் 118 மூட்டை தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள், 114 பாக்ஸ் கர்நாடக மது பாட்டில்கள், 2 கிலோ கஞ்சா மற்றும் 2 கார், ஒரு மினி, வேன், ஆட்டோ, 2 பைக்குகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பாக 10 பேர் கைது செய்யப்பட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட 2 கிலோ கஞ்சா மற்றும் மது பாட்டில்கள் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பு ₹52 லட்சம் என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: