சர்ச்சைக்குரிய டூல்கிட் விவகாரத்தில் பெங்களூரு சென்று அதிரடி டிவிட்டர் இயக்குநரிடம் டெல்லி போலீஸ் விசாரணை: தடை செய்ய எண்ணமில்லை மத்திய அமைச்சர் அறிவிப்பு

புதுடெல்லி: கொரோனா விவகாரத்தில் மத்திய பாஜ அரசு குறித்கு அவதூறான கருத்துகளை சமூக வலைதளங்களில் பரப்பி பிரதமர் மோடியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் விதமாக காங்கிரஸ் சார்பில் ‘டூல்கிட்’ ஒன்று திட்டமிட்டுப் பரப்பப்பட்டதாக பாஜ செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா டிவிட்டரில் கருத்து தெரிவித்தார். அத்துடன் சில ஆவணங்களை அவர் இணைத்து வெளியிட்டார். இந்த பதிவு ‘சித்தரிக்கப்பட்ட பதிவு’ என டிவிட்டர் டேக் செய்தது. இதற்கு பாஜ தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும், டிவிட்டர் நிறுவனம் மீது டெல்லி போலீசில் புகார் தரப்பட்டது. இது தொடர்பாக சிறப்புப்படை போலீசார் டெல்லியில் உள்ள டிவிட்டர் அலுவலகங்களில் கடந்த மாதம் 24ம் தேதி நேரில் சென்று விசாரணை நடத்தினர். இது கருத்து சுதந்திரத்தை நசுக்கும் செயல் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. இந்த விவகாரம் தொடர்பாக டிவிட்டர் நிர்வாக இயக்குநர் மணிஷ் மகேஸ்வரி விசாரணையில் இணையுமாறு டெல்லி போலீசார் சம்மன் அனுப்பினர். அதற்கு அவர் இ-மெயில் வாயிலாக பதில் அளித்துள்ளார்.

பலமுறை சம்மன் அனுப்பியும் அவர் நேரில் வராததால், கடந்த மாதம் 31ம் தேதி டெல்லி சிறப்புப் பிரிவு போலீசார் பெங்களூரூ விரைந்து, அங்கு டிவிட்டர் இந்தியா நிர்வாக இயக்குநர் மணிஷ் மகேஸ்வரியின் வீட்டுக்கே சென்று விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த தகவலை டெல்லி போலீசார் தற்போது வெளியிட்டுள்ளனர். மேலும், விசாரணை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. இதற்கிடையே, புதிய தகவல் தொழில்நுட்ப விதிகளை டிவிட்டர் நிறுவனம் ஏற்காததால் இந்தியாவின் சட்ட பாதுகாப்பை அந்நிறுவனம் இழந்துள்ளது. இதற்கிடையே, விதிமுறைகளை ஏற்றால் சட்ட பாதுகாப்பு வழங்கப்படும் என கூறியுள்ள மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், டிவிட்டருக்கு தடை விதிக்கும் எண்ணமில்லை என தெரிவித்துள்ளார்.

* ‘டிவிட்டரை அழிக்க முயற்சி’

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று அளித்த பேட்டியில், ``டிவிட்டர் நிறுவனத்தை கட்டுப்படுத்த முடியாததால், மத்திய அரசு அதை அழிக்க முயற்சிக்கிறது. இதை வன்மையாக கண்டிக்கிறேன். அரசு தன்னால் ஒருவரை சமாளிக்க முடியாவிட்டால் அவர்களை அழிக்க நினைக்கிறது. மத்திய அரசால் என்னை கட்டுப்படுத்த முடியவில்லை. எனவே, மேற்கு வங்கத்தில் எனது ஆட்சியை அழிக்க நினைக்கிறது,’’ என்றார்.

Related Stories: