கேரள மாநிலம் கொல்லத்தில் கைப்பற்றப்பட்ட ஜெலட்டின் குச்சிகள் திருச்சியில் தயாரிக்கப்பட்டவை: தீவிரவாத தடுப்பு படை விசாரணையில் அம்பலம்

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம்  அருகே வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட சக்தி வாய்ந்த ஜெலட்டின்  குச்சிகள் திருச்சியில் தயாரிக்கப்பட்டது என்ற பரபரப்பு தகவல் வெளியாகி  உள்ளது. கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ள பத்தனாபுரத்தில் உள்ள  வனப்பகுதியில் சாக்கு மூட்டையில் 2 ஜெலட்டின் குச்சிகள், 6 டெட்டனேட்டர்  பேட்டரிகள், ஒயர்கள், இணைக்க பயன்படுத்தும் பசை இருந்ததை வனத்துறையினர்  கண்டுபிடித்தனர். இது தீவிரவாதிகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால்  தீவிரவாதிகள் மறைத்து வைத்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதே போல்  பத்தனம்திட்டா மாவட்டத்தில் கோநி வனப்பகுதியிலும் வனத்துறையினர் 90  ஜெலட்டின் குச்சிகளை கண்டுபிடித்து உள்ளனர். இந்த சம்பவம் கேரளாவில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக மத்திய உளவு துறைக்கும் தகவல்  தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரள தீவிரவாத தடுப்பு படை டிஐஜி அனூப் குருவிலா  ஜாண் தலைமையிலான போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். இதில்  பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

பத்தனாபுரத்தில்  கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஜெலட்டின் குச்சிகள் திருச்சியில் உள்ள ஒரு தனியார்  நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டது என்பது தெரியவந்தது.

போலீசார் அந்த  நிறுவனத்துடன் தொடர்பு கொண்டு விசாரித்தனர். அந்த ஜெலட்டின் குச்சிகளில்  பேட்ச் எண் இல்லாததால் யாருக்கு விற்பனை செய்யப்பட்டது என்பதை கண்டுபிடிக்க  முடியாது என அவர்கள் கூறிவிட்டனர். கடந்த 3 வாரங்களுக்கு முன்பு தான்  ஜெலட்டின் குச்சிகளை இங்கு போட்டு சென்றிருக்கலாம் என போலீசார்  கருதுகின்றனர். கைப்பற்றப்பட்ட டெட்டனேட்டர்கள் அதிக சக்தி வாய்ந்தவை அல்ல  என்பதால் வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சி கொடுப்பதற்காக இவற்றை  பயன்படுத்தி இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதையடுத்து கேரள தீவிரவாத தடுப்பு படை போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டிலும்  விசாரணை நடத்த தீர்மானித்துள்ளனர்.

Related Stories: