வேறு பெண்ணுடன் திருமணம்: புதுமாப்பிள்ளையை உயிருடன் எரித்த க.காதலி கைது

திருமயம்: புதுக்கோட்டை அருகே வேறு பெண்ணை மணக்க இருந்த புதுமாப்பிள்ளையை உயிருடன் தீ வைத்து எரித்த கள்ளக்காதலியை போலீசார் கைது செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள காயாம்பட்டியை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மகன் சதீஷ் (எ) பாலகிருஷ்ணன்(26). டிரைவர். இவருக்கும், உறவினர் பெண்ணுக்கும் நேற்று காலை திருமணம் நடைபெற இருந்தது. இதனிடையே நேற்று முன்தினம் நள்ளிரவு சதீஷ் தீக்காயங்களுடன் மீட்கப்பட்டார். இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் சதீஷை கள்ளக்காதலி வரவழைத்து தீ வைத்து எரித்து கொலை செய்ய முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் கூறியதாவது: சதீசுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் மனைவி ராதா(32) என்பவருக்கும் கள்ள தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. ராதாவின் கணவர் 7 வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார்.

இதனால் 12 வயது மகனுடன் ராதா தனியாக வசித்து வந்தார். அப்போது ராதாவுடன் சதீசுக்கு பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருக்கமாக பழகி வந்துள்ளனர். ராதாவை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பழகியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சதீசுக்கு உறவுக்கார பெண்ணுடன் திருமணத்துக்கு ஏற்பாடு நடந்தது. இதனால் கடந்த ஒரு வாரமாக சதீஷ் ராதாவுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் ராதா, சதீஷ் மீது கடும் கோபத்தில் இருந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சதீசை தனது வீட்டுக்கு வரும்படி ராதா அழைத்தார். அங்கு சென்ற சதீஷ், ராதாவுடன் பேசிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் வீட்டிலேயே தூங்கியுள்ளார். இவர் அயர்ந்து தூங்கும்போது, ராதா மண்ெணணெயை எடுத்து, சதீஷ் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். இதில் தீப்பிடித்து பதறியடித்து எழுந்த சதீஷ் தனது உடைகளை அங்கேயே கழட்டி எறிந்து விட்டு, ராதா வீட்டில் இருந்து தெருவுக்கு ஓடி வந்தார்.

இதை பார்த்த அக்கம் பக்கத்தினர்  தீயை அணைத்து சதீசை மீட்டு அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராதாவை கைது செய்து விசாரணை நடத்தினர். இதில் அவர் சதீசை எரித்து கொல்ல முயன்றது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

Related Stories:

>