கேரளாவில் முழு ஊரடங்கில் தளர்வு: இன்று மாலை அறிவிப்பு வெளியாகிறது

திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பரவல் குறைந்துள்ளதால் முழு ஊரடங்கு நிபந்தனைகளில் தளர்வுகள் ஏற்படுத்துவது குறித்து இன்று முடிவு எடுக்கப்படுகிறது. கேரளாவில் கொரோனா 2வது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த மாதம் ஒரே நாளில் நோயாளிகளின் எண்ணிக்கை 43 ஆயிரத்தை நெருங்கியது. தொற்று விகிதம் 28ஐ தாண்டியது. இதனால் கடந்த ஏப்ரல் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. திருவனந்தபுரம் உள்பட 4 மாவட்டங்களில் மும்மடங்கு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. கடந்த 2 நாளாக கேரளா முழுவதும் மும்மடங்கு ஊரடங்குக்கு இணையான கடும் நிபந்தனைகளும் கடைபிடிக்கப்பட்டன. பொது மக்கள் அத்தியாவசிய தேவைக்கு மட்டுமே வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று 94,677 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதில் 11,584 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று விகிதம் 12.24 ஆகும். திருவனந்தபுரம் மாவட்டத்தில் தான் மிக அதிகமாக நேற்று 1,775 பேருக்கு நோய் பரவியது. சுகாதார துறையை சேர்ந்த 66 பேருக்கும் நோய் உறுதி செய்யப்பட்டது. நோய் பாதித்து சிகிச்சையில் இருந்த 206 பேர் நேற்று மரணமடைந்தனர். இதையடுத்து இதுவரை மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 11,181 ஆக உயர்ந்துள்ளது. நோய் பாதித்து சிகிச்சையில் இருந்த 17,856 பேர் நேற்று குணமடைந்துள்ளனர். இந்த நிலையில் தற்போது அமலில் உள்ள முழு ஊரடங்கு நாளை மறுநாள் (16ம் தேதி) முடிவடைகிறது.

அதன்பின்னர் தற்போது நோய் பரவல் குறைந்து உள்ளதால் ஊரடங்கு நிபந்தனைகளில் தளர்வு ஏற்படுத்துவது குறித்து ஆலேசிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக இன்று முடிவெடுக்கப்படுகிறது. ஆட்டோ டாக்சி சேவைகள், ஒர்க்‌ஷாப்புகள், சலூன் கடைகள் உள்பட கடைகளுக்கு நிபந்தனைகளுடன் அனுமதி அளிக்கப்படும் என தெரிகிறது. இதுதொடர்பான அறிவிப்பு இன்று மாலை வெளியிடப்படுகிறது.

Related Stories: