கார் ஷோரூம் உரிமையாளருக்கு கொலை மிரட்டலில் கைதான நாம் தமிழர் கட்சி மாஜி நிர்வாகி மீது திருப்பனந்தாள் ஸ்டேஷனிலும் வழக்கு

கும்பகோணம்: திருச்சியில் கார் ஷோரூம் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைதான நாம்தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி மீது திருப்பனந்தாள் காவல்நிலையத்திலும் நேற்று வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  திருச்சி கே.கே.நகர் பகுதியில் கார் வீல் அலைன்மென்ட் நிறுவனம் நடத்தி வருபவர் வினோத்(33). அவரது கார் நிறுவனத்துக்கு நாம் தமிழர் கட்சியின் முன்னாள் மாநில இளைஞர் பாசறை செயலாளரும், யூடியூப் சேனல் நடத்தி வருபவருமான துரைமுருகன், திருச்சி மேற்கு மாவட்ட செயலாளர் வினோத், கட்சி நிர்வாகிகள் சரவணன், சந்தோஷ்குமார் உள்ளிட்ட 10 பேர் சென்று வினோத்தை மிரட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.  இது தொடர்பாக வினோத் கொடுத்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் 5 பிரிவின்கீழ் வழக்கு பதிந்து துரைமுருகன், வினோத், சரவணன், சந்தோஷ் குமார் ஆகிய 4 பேரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். தலைமறைவான மற்றவர்களை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் துரைமுருகன் ஏற்கனவே மறைந்த திமுக தலைவர் கலைஞரை பற்றி அவதூறாக 14 நிமிடம் ஓடும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து திருவிடைமருதூர் திமுக வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ராஜசேகரன், திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் நேற்று புகார் மனு கொடுத்தார். அதன் பேரில் போலீசார், அவதூறு பரப்பியது, தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது உள்ளிட்ட 4 பிரிவின் கீழ் துரைமுருகன் மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இது தவிர கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட மேலும் பல வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டு வருகின்றன.

Related Stories: