கோவிஷீல்டு தடுப்பூசியை தொடர்ந்து அமெரிக்காவில் கோவாக்சினை பயன்படுத்த அனுமதி மறுப்பு: கூடுதல் தகவல்கள் கேட்டு கெடுபிடி

வாஷிங்டன்: தகவல்கள் போதாது எனக் கூறி கோவாக்சின் தடுப்பூசியை அமெரிக்காவில் அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதிக்க அந்நாட்டின் உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் மறுத்து விட்டது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், ஐதராபாத்தின் பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து தயாரித்த கோவாக்சின் மற்றும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம், அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகள் இந்தியாவில்  பயன்பாட்டில் உள்ளன. இதில் கோவாக்சினுக்கு உலக சுகாதார நிறுவனத்தின் அனுமதி கிடைக்கவில்லை. இந்த அனுமதி இருந்தால்தான், கொரோனா தடுப்பூசி போட்டுள்ளதாக உலக நாடுகள் ஏற்கும். இந்நிலையில், கோவாக்சினுக்கு அமெரிக்காவில் அவசரகால அனுமதி தர அந்நாட்டு உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிர்வாகம் (எப்டிஏ) மறுப்பு தெரிவித்துள்ளது.

கோவாக்சினை வெளிநாடுகளில் உற்பத்தி செய்து விநியோகிக்க அமெரிக்காவின் ஓகுஜன் நிறுவனத்துடன் பாரத் பயோடெக் கூட்டு சேர்ந்துள்ளது. ஓகுஜன் நிறுவனம் கோவாக்சினின் பரிசோதனை தகவல்களுடன் அமெரிக்காவில் அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தது. ஆனால், ஓகுஜனின் விண்ணப்பத்தை எப்டிஏ ஏற்கவில்லை. ஓகுஜன் வழங்கிய தகவல்கள் போதுமானதாக இல்லை எனவும், கூடுதலாக பரிசோதனைகளை நடத்திய முடிவுகளை தர வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, புனேவை சேர்ந்த சீரம் நிறுவனம் உற்பத்தி செய்யும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கும் எப்டிஏ அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும், கோவிஷீல்டு தடுப்பூசியை உலக சுகாதார நிறுவனம் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் அங்கீகரித்துள்ளன.

* ஜிம்பாப்வே போன்ற சிறு நாடுகள் மட்டுமே கோவாக்சினுக்கு அவசரகால பயன்பாட்டிற்கான அனுமதி தந்துள்ளன. பிரேசில் கூட சமீபத்தில் கோவாக்சின் விண்ணப்பத்தை நிராகரித்தது. பின்னர் கடுமையான கட்டுப்பாடோடு குறைந்த அளவிலான தடுப்பூசிகளை மட்டும் அந்நாட்டில் இறக்குமதி செய்ய சம்மதித்தது.

* இந்தியாவில் இதுவரை சுமார் 3 கோடி பேர் கோவாக்சின் தடுப்பூசி போட்டுள்ளனர்.

Related Stories: