நடைப்பயிற்சியில் ஈடுபட்ட போது ரூ1 கோடி கேட்டு வக்கீல் மனைவி கடத்தல்: உ.பி-யில் 5 பேர் கும்பல் அதிரடி கைது

லக்னோ: உத்தரபிரதேசத்தில் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த வக்கீலின் மனைவியை கடத்திய கும்பலைச் சேர்ந்த 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத் உயர் நீதிமன்ற வழக்கறிஞரின் மனைவி சுஷாந்தி, கடந்த 6ம் தேதி கோல்ஃப் சிட்டி பகுதியில் நடைபயிற்சி மேற்கொண்டார். அப்போது, அவரை சுற்றிப்பிடித்த கும்பல், அங்கிருந்து அவரை கடத்திச் சென்றது. பின்னர், அந்த கும்பல் சுஷாந்தியின் செல்போனை பறித்து, அவர் மூலமாக அவரது குடும்பத்தினரை தொடர்பு கொண்டது.

சுஷாந்தியை விடுவிக்க வேண்டுமானால், ரூ .1 கோடி கொடுக்க வேண்டும் என்றும், அப்போதுதான் அவரை விடுவிப்பதாக கூறி மிரட்டியது. அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். உஷாரான சிறப்பு காவல் படை மற்றும் லக்னோ காவல்துறையின் தனிப்படை போலீசார், கடத்தல் கும்பலை கண்டுபிடிக்க களத்தில் குதித்தனர். அதன்பின் போலீசாருக்கு கிடைத்த தகவலின்படி, கடத்தப்பட்ட பெண்ணை மோகன்லல்கஞ்ச் அடுத்த ஹர்வன்ஷ் கர்ஹி  பகுதியில் உள்ள வீட்டில் போலீசார் மீட்டனர். மேலும் கடத்தல் கும்பலை சேர்ந்த குற்றவாளி சந்தோஷ் சவுபேவை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீசார் கூறுகையில், ‘சுஷாந்தியை கடத்திச் சென்றது சந்தோஷ் சவுபே என்பது உறுதியானது. அவர், லக்னோவில் ஒரு பெண்ணுடன் சுற்றித் திரிந்தார். காவல்துறை கண்காணிப்பு மற்றும் செல்போன் சிக்னல் அடிப்படையில் அவனை பிடித்தோம். அவனிடம் பெறப்பட்ட தகவலின் அடிப்படையில் மோகன்லல்கஞ்சில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட சுஷாந்தியை மீட்டோம். இந்த கடத்தல் வழக்கில் மொத்தம் 10 பேர் சம்பந்தப்பட்டிருந்தாலும் கூட, இதுவரை 5 பேரை மட்டுமே கைது செய்துள்ளோம். மீதமுள்ள குற்றவாளிகளை தேடி வருகிறோம்’ என்றனர்.

Related Stories: