இந்திய மக்களை நிறத்தின் அடிப்படையில் அவமதிப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டேன்: பிரதமர் நரேந்திர மோடி காட்டம்

தெலுங்கானா: இந்திய மக்களை நிறத்தின் அடிப்படையில் அவமதிப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டேன் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடாவின் சர்ச்சை கருத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். தெலுங்கானா மாநிலம் வாரங்கலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் மக்களை ஏமாற்றுவது தெலுங்கானாவை விட வேறு யாருக்கும் தெரியாது. விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வதாக காங்கிரஸ் வாக்குறுதி அளித்தது. இப்போது அதை தக்கவைக்க லோக்சபா தேர்தல் முடியும் வரை காலதாமதம் செய்கிறார்கள்.

அந்த வாக்குறுதியை காற்றில் தொங்கவிடுகிறார்கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்து தெலுங்கானா வளர்ச்சி முடங்கியுள்ளது. மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் எங்கே போகிறது? ஆர்ஆர் வரி என்ற போர்வையில் உங்களை கொள்ளையடிக்கிறார்கள். அதில் பாதி ஹைதராபாத்தில் உள்ள ‘ஆர்’க்கும், மற்ற பாதி டெல்லியில் உள்ள ‘ஆர்’க்கும் செல்கிறது என மோடி தெரிவித்தார். தொடர்ந்து, காங்கிரஸ் மூத்த தலைவர் சாம் பிட்ரோடாவின் சர்ச்சை கருத்துக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார். தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல இருப்பதாக சாம் பிட்ரோடா பேசியிருந்தார். சாம் பிட்ரோடாவின் கருத்தை ஏற்கவில்லை என காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்களைப் போல் இருப்பதாக சாம் பிட்ரோடா பேசியதற்கு பிரதமர் மோடி கட்டமாக பதில் அளித்துள்ளார். திரௌபதி முர்மு மிகவும் நற்பெயரும், ஆதிவாசி குடும்பத்தின் மகளுமான திரௌபதி முர்முவைத் தோற்கடிக்க ஏன் இவ்வளவு முயற்சி செய்கிறார் என்று நான் நிறைய யோசித்துக்கொண்டிருந்தேன், ஆனால் அதன் காரணத்தை இன்று தெரிந்துகொண்டேன். யாரேனும் என்னை தவறாக பேசினால் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியும்.

ஆனால் தோல் நிறத்தை வைத்து இந்தியர்களை மதிப்பிடுவது எனக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் அரசியல் ஆலோசகர் பிட்ரோடாவின் பேச்சு எனக்கு கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மக்களை நிறத்தின் அடிப்படையில் அவமதிப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டேன். தோல் நிறத்தை வைத்து இந்தியர்களை மதிப்பிடுவதை நாட்டு மக்கள் சகித்துக் கொள்ள மாட்டார்கள். அரசியலமைப்பை தலையில் தூக்கி வைத்துக் கொண்டு நடனமாடும் மக்கள், தங்கள் தோலின் நிறத்தை வைத்து எனது நாட்டு மக்களை அவமதிக்கிறார்கள் என மோடி காட்டமாக கூறினார்.

The post இந்திய மக்களை நிறத்தின் அடிப்படையில் அவமதிப்பதை ஒருபோதும் ஏற்க மாட்டேன்: பிரதமர் நரேந்திர மோடி காட்டம் appeared first on Dinakaran.

Related Stories: