அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் மோதல் மீண்டும் வலுக்கிறது: நெல்லை பகுதியில் தொண்டர்களின் போஸ்டரால் பரபரப்பு

நெல்லை: அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் மோதல் மீண்டும் வலுக்கிறது. நெல்லை பகுதியில் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் ஒட்டியுள்ள போஸ்டர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதிமுகவில் ஓபிஎஸ் ஒருங்கிணைப்பாளராகவும், எடப்பாடி இணை ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகின்றனர். எனினும் இபிஎஸ், ஓபிஎஸ் இடையே தொடர்ச்சியாக மோதல் நடந்து வருகிறது. கடந்த சட்டசபைத் தேர்தலின் போது முதல்வர் வேட்பாளருக்கு இரு தரப்பு ஆதரவாளர்களும் கடுமையாக மோதிக் கொண்டனர். இதில் எடப்பாடி பழனிசாமியின் கை ஓங்கியதால், அவர் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, தேர்தலை சந்தித்தனர். சட்டமன்ற தேர்தலில் அதிமுக தோல்வியடைந்து ஆட்சியை இழந்தது.

இருப்பினும் ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் நீறுபூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்தது. இந்நிலையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு இருவரது ஆதரவாளர்களும் கடுமையாக மோதிக் கொண்டனர். இதிலும் எடப்பாடி பழனிசாமியே வெற்றி பெற்றார். இதனால் தென்மாவட்டங்களில் அதிகம் காணப்படும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அவர்கள் சமூக வலைதளங்களிலும், நிர்வாகிகள் கூட்டங்களிலும் ஓபிஎஸ்சுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஓபிஎஸ்சுக்கு மீண்டும் முக்கியத்துவம் அளிக்கக் கோரி, நெல்லை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டி வருகின்றனர்.

நெல்லை அருகே மானூர் வட்டார பகுதிகளில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஒட்டிய போஸ்டரில், ‘‘ஜெயலலிதாவால் அடையாளம் காட்டப்பட்ட ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை கலந்தாலோசிக்காமல் எவ்விதமான செயல்பாடுகளோ, நடவடிக்கைகளோ செய்யாதே. அவ்வாறு செய்ததால்தான் சட்டசபை தேர்தலில் தோற்றுப் போனோம். இனிமேலும் அது தொடர்ந்தால் தலைமை கழகத்தை முற்றுகையிடுவோம்’’ என எடப்பாடிக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதற்கு கீழே மானூர் ஒன்றிய அதிமுக தொண்டர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த போஸ்டரால் அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பு கிளம்பியுள்ளது. போஸ்டரை ஒட்டியது யார் என அதிமுகவில் விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது.

Related Stories: