சென்னை மாவட்ட குழந்தைகள் நல குழு முன்பு ஆஜர் ஆசிரியரால் பாதிக்கப்பட்ட 300 மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் என்ன பதில் சொல்ல போகிறது

* பத்மா சேஷாத்திரி பள்ளி தாளாளர் ஷீலா,

* முதல்வர் கீதாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை

சென்னை: பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட 300 மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோருக்கு பத்மா சேஷாத்திரி பள்ளி நிர்வாகம் என்ன பதில் சொல்ல போகிறது உள்ளிட்ட சரமாரியாக கேள்விகளை பத்மா சேஷாத்திரி பள்ளி முதல்வர் கீதா மற்றும் தாளாளர் ஷீலாவிடம் சென்னை மாவட்ட குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் எழுப்பியுள்ளனர்.சென்னை கே.கே.நகர் பகுதியில் இயங்கி வரும் பத்மா சேஷாத்திரி பள்ளி மற்றும் விருகம்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் பத்மா சேஷாத்திரி மில்லினியம் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அளித்த புகாரின் படி வணிகவியல் ஆசிரியர் ராஜகோபாலன் மற்றும் கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் கெவின்ராஜ் வழக்கு மாநகர காவல் துறையில் இருந்து சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.  அதேநேரம் கே.கே.நகர் கிளையில் இயங்கி வரும் பத்மா சேஷாத்திரி பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கை மாநகர காவல் துறை தான் தற்போதும் விசாரணை நடத்தி வருகிறது.

பாதிக்கப்பட்ட மாணவிகள் பள்ளி நிர்வாகத்தின் குறித்து ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளனர். பத்மா சேஷாத்திரி பள்ளி மாணவிகள் தான் அதிகளவில் ஆசிரியர் ராஜகோபாலன் மற்றும் கராத்தே மாஸ்டர் கெவின்ராஜ் ஆகியோரால் பாதிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள இரண்டு ஆசிரியர்களும் பத்மா சேஷாத்திரி பள்ளி நிர்வாகிகள் மற்றும் அவர்களின் மகன்களுடன் நேரடியாக தொடர்பில் இருந்தது அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போனில் இருந்து தெரியவந்துள்ளது. மேலும், ஆசிரியர்கள் இரண்டு பேர் அளித்த தகவலின் படி பள்ளி நிர்வாகிகளின் மகன்களிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். இந்நிலையில் மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில்  பத்மா சேஷாத்திரி பள்ளியின் தாளாளர் ஷீலா ராஜேந்திரன், முதல்வர் கீதா கோவிந்தராஜன் ஆகியோர் கடந்த 4ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஆனால் மாணவிகளின் புகாரின் படி பள்ளி நிர்வாகம் சார்பில் இருவரும் அளித்த விளக்கத்தை மாநில குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அதிகாரிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. அதேநேரம், சென்னை மாவட்ட குழந்தைகள் நலக்குழு சார்பில் அளிக்கப்பட்ட சம்மனை தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு பத்மா சேஷாத்திரி பள்ளியின் தாளாளர் ஷீலா ராஜேந்திரன், முதல்வர் கீதா கோவிந்தராஜன் ஆகியோர் நேரில் ஆஜராகினர்.

அப்போது, சென்னை மாவட்ட குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள், பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜன், தாளாளர் ஷீலா ராஜேந்திரன் ஆகியோரிடம், மாணவிகள் அளித்த புகாரில் பெரும்பாலான புகாரில், ஆசிரியர் ராஜகோபாலன் விடுமுறை நாட்களில் நடைபெறும் சிறப்பு வகுப்பின் போது பள்ளயில் உள்ள ஓய்வு அறையில் தான் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிவித்துள்ளார்களே....அதற்கு உங்கள் பதில் என்ன? உங்கள் பள்ளியில் படிக்கும் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு பாதுகாப்பு தொடர்பான எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? வயது வந்த மாணவிகள் படிக்கும் வகுப்பு அறையின் அருகே பாதுகாப்புக்காக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா? ராஜகோபாலனிடம் பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப் பள்ளிக்கு கொண்டு வந்துள்ளாரா? 3 நாள் காவலில் போலீசாரிடம் கடந்த 10 ஆண்டுகளில் 300 மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக வாக்குமூலம் அளித்துள்ளாரே அதற்கு உங்கள் பதில் என்ன? பாதிக்கப்பட்ட 300 மாணவிகள் மற்றும் மாணவிகளின் பெற்றோர்களுக்கு நீங்கள் சொல்லும் விளக்கம் என்ன?

ஆசிரியர் மீது பாலியல் புகார் அளித்த மாணவிகளை நீங்கள் மிரட்டியதாக மாணவிகள் அளித்த புகாரில் கூறப்பட்டுள்ளதே அது உங்கள் விளக்கம் என்ன? ராஜகோபாலன் தனது வாக்குமூலத்தில் என்னை போல் 3 ஆசிரியர்கள் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக கூறியுள்ளாரே? யாருடைய அழுத்தம் காரணமாக ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்கு நடவடிக்கை எடுக்க வில்லை.பள்ளி முதல்வரை விட ஆசிரியர் ராஜகோபாலன் அதிகாரத்தில் இருந்ததற்கு யார் காரணம்? சம்பந்தப்பட்ட 3 ஆசிரியர்கள் மீது பள்ளி நிர்வாகம் சார்பில் நடவடிக்கை ஏதேனும் எடுக்கப்பட்டுள்ளதா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளை சென்னை மாவட்ட குழந்தைகள் நலக்குழு அதிகாரிகள் கேட்டனர். மூன்றரை மணி நேரம் நடந்த விசாரணையில் பத்மா சேஷாத்திரி பள்ளி முதல்வர் கீதா கோவிந்தராஜன், தாளாளர் ஷீலா ராஜேந்திரன் அளித்த பதிலை அதிகாரிகள் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: