பராமரிப்பு பணிகளுக்கு இதுவா நேரம்? பாளையங்கால்வாயில் தண்ணீர் குறைப்பால் விவசாயம் பாதிப்பு

நெல்லை : பராமரிப்பு பணிகளை காரணம் காட்டி பாளையங்கால்வாயில் தண்ணீர் குறைப்பு காரணமாக வேளாண் பணிகளை மேற்கொள்ள முடியாமல் விவசாயிகள் திண்டாடுகின்றனர்.

 தாமிரபரணி பாசன பரப்பில் முக்கிய கால்வாயாக பாளையங்கால்வாய் திகழ்கிறது. இக்கால்வாய் மூலம் 12 ஆயிரம் ஏக்கர் பாசனம் நடக்கிறது.  தாமிரபரணி ஆற்றில் பழவூர் தடுப்பணையில் தொடங்கும் இக்கால்வாய் 43 கிமீ தொலைவு சென்று நொச்சிக்குளத்தில் நிறைவு பெறுகிறது. 162 மடைகள் கொண்ட பாளையங்கால்வாயில் கடந்த சில ஆண்டுகளாகவே கடைமடை குளங்களான நொச்சிக்குளம், சாணான்குளம் உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் சென்று சேருவதில்லை.

இந்நிலையில் வழக்கத்திற்கு மாறாக இவ்வாண்டு ஜூன் 1ம் தேதியன்று பாபநாசம் அணையில் இருந்து கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. கோடை காலத்தில் பெய்த மழை காரணமாகவும், அணையில் இருந்து நீர் திறக்கப்பட்ட காரணத்தாலும் விவசாயிகள் கண்டிப்பாக இவ்வாண்டு கார் சாகுபடி நடக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளனர். நெல்லை, கோடகன் கால்வாய்களில் தண்ணீர் இப்போது குறிப்பிட்ட அளவு செல்லும் நிலையில், பாளையங்கால்வாய் திறக்கப்பட்டும் தண்ணீர் வரத்து தடைப்பட்டுள்ளது.

கீழப்பாட்டம் பகுதியில்  நடக்கும் பராமரிப்பு பணிகளை காரணம் காட்டி, பொதுப்பணித்துறையினர் பாளையங்கால்வாய் திறந்த மறுநாளே தண்ணீர் வரத்தை குறைத்துவிட்டனர். இதனால் முன்னீர்பள்ளம், தருவை, பாளை, மூளிக்குளம், திம்மராஜபுரம் பகுதி விவசாயிகள் தண்ணீரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நடுவக்குறிச்சி, ெநாச்சிக்குளம் பகுதிகளுக்கு இம்முறையாவது தண்ணீர் சேருமா என்ற எதிர்பார்ப்பும் விவசாயிகள் மத்தியில் உள்ளது. கீழப்பாட்டத்தில் பணிகளை முடித்துவிட்டு இரு தினங்களில் தண்ணீரை அதிகளவில் திறப்போம் என பொதுப்பணித்துறை கூறி வருகின்றனர்.

மற்ற கால்வாய்களில் தண்ணீர் சீராக செல்லும் நிலையில், பாளையங்கால்வாயில் தண்ணீர் அடைக்கப்பட்டது விவசாயிகளை கவலைக்குள்ளாக்கி வருகிறது. பாசனம் நடக்கும் நேரத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்கிறார்களே என விவசாயிகள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: