மாரண்டஅள்ளி பகுதியில் ஆலங்கட்டி மழையால் பப்பாளி விளைச்சல் பாதிப்பு-விவசாயிகள் கவலை

தர்மபுரி :  மாரண்டஅள்ளி அருகே பெய்த ஆலங்கட்டி மழையால், பப்பாளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் தர்மபுரி, நல்லம்பள்ளி, பென்னாகரம், பாலக்கோடு, மாரண்டஅள்ளி, மொரப்பூர், பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் ஆகிய இடங்களில், 300 ஏக்கருக்கு மேல், விவசாயிகள் பப்பாளி சாகுபடி செய்துள்ளனர். தொடர்ந்து மூன்று ஆண்டிற்கு பலன் கிடைப்பதால், விவசாயிகள் இதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். சொட்டுநீர் பாசனத்தில் பப்பாளி சாகுபடி செய்யப்படுகிறது.

தோட்டக்கலைத்துறை சார்பில் பப்பாளி நாற்றுக்கு மானியமும் தரப்படுகிறது. நடவு செய்த 3 மாதங்களில் இருந்து பப்பாளி அறுவடை செய்யலாம். வைரஸ் போன்ற நோய் தாக்குதல் இல்லையெனில், தொடர்ந்து 3 ஆண்டுகளுக்கு பலன் கிடைக்கும். குறிப்பாக கோடையான ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் நல்ல விலை கிடைக்கும். 15 நாட்களுக்கு ஒரு முறை அறுவடை செய்யப்படுகிறது. பெங்களூரு மற்றும் கேரள வியாபாரிகள் நேரடியாக வயல்வெளிகளுக்கு வந்து கொள்முதல் செய்கின்றனர். தற்போது ஒரு கிலோ ₹6 முதல் ₹15வரை விற்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாரண்டஅள்ளி, காடுசெட்டிப்பட்டி பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்தது. இதில் அறுவடை பருவத்திற்கு வந்த பப்பாளி மீது ஆலங்கட்டி மழை விழுந்து சேதமடைந்தது.இதனால் விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டு இழப்பு ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகள் கூறியதாவது:

பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளான, பஞ்சப்பள்ளி, பாளையம், காடுசெட்டிப்பட்டி, மாரண்டஅள்ளி சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பரவலாக பப்பாளி சாகுபடி செய்துள்ளனர். தோட்டங்களில் பப்பாளி காய்கள் பிடித்துள்ள நிலையில், தற்போது காற்றுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. பப்பாளி காய்கள் அறுவடைக்கு வருவதற்கு முன்பே, ஆலங்கட்டி மழையால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு சமயத்தில் போதிய வருமானமின்றி தவித்து வரும் இந்தநேரத்தில், சாகுபடி செய்துள்ள பப்பாளி கை கொடுக்கும் என எதிர்பார்ப்போடு காத்திருந்த விவசாயிகளான தங்களுக்கு, திடீரென கொட்டிய ஆலங்கட்டி மழை பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள பப்பாளி விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலம் உரிய நிவாரணம் கிடைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.

Related Stories: