எல்லையில் 50 ஆயிரம் பேரை குவித்து குடைச்சல் லடாக்கில் குளிர் தாங்க முடியாமல் 90% சீன வீரர்கள் உடல்நிலை பாதிப்பு: சுழற்சி முறையில் மாற்றி சமாளிப்பு

புதுடெல்லி: கிழக்கு லடாக் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ள 50 ஆயிரம் சீன ராணுவ வீரர்கள், அங்கு நிலவும் கடும் குளிரை தாக்குப் பிடிக்க முடியாமல் உடல்நிலை பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், சுழற்சி முறையில் 90 சதவீதம் வீரர்களை மாற்றி சீன ராணுவம் சமாளித்து வருகிறது. கடந்தாண்டு ஜூன் மாதம் கிழக்கு லடாக் கல்வான் பகுதியில் சீன ராணுவம் அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்தது. இதனால், இருதரப்பு படையினர் மத்தியில் மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீன தரப்பில் சுமார் 45 வீரர்கள் பலியானதாக கூறப்படுகிறது. இந்த மோதலைத் தொடர்ந்து பாங்காங் திசோ ஏரி, பிங்கர் பகுதிகளில் இரு படைகளும் குவிக்கப்பட்டன. லடாக் எல்லையிலும் சீனா 50,000 வீரர்களை களமிறக்கியது. அதே எண்ணிக்கையில் இந்தியாவும் வீரர்களை நிறுத்தி இருக்கிறது. இதனால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டது.   இதையடுத்து, இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகளும், வெளியுறவுத்துறை அதிகாரிகளும் நீண்ட பேச்சுவார்த்தை நடத்தி படைகள் வாபஸ் பெற ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்படி, பாங்காங் திசோ, பிங்கர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து படைகள் பின்வாங்கப்பட்டு உள்ளன.

ஆனாலும், லடாக் எல்லையில் நிறுத்தப்பட்ட படைகள் வாபஸ் பெறப்படவில்லை.இந்நிலையில், லடாக் எல்லையில் பாதுகாப்பு பணியில் உள்ள படை வீரர்களில் 90 சதவீதம் பேரை சுழற்சி முறையில் சீனா மாற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. உள்நாட்டிலிருந்து புதிய வீரர்களை அழைத்து வந்து, புதிய படை களமிறக்கப்பட்டுள்ளது. அவர்கள், லடாக்கில் உள்ள உயரமான எல்லைப் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளனர். இந்த மாற்றத்திற்கு காரணம், கடந்த ஆண்டு குளிர்காலத்தில் லடாக்கில் நிலவிய கடும் குளிரில் சீன படையினர் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு நிலவிய குளிரை சீன வீரர்கள் தாக்குபிடிக்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டுள்ளனர். பாங்காங் ஏரியின் உயரமான மலை எல்லையில் தினசரி அடிப்படையில் வீரர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதனால் கோடைக்காலம் தொடங்கியதுமே, பழைய வீரர்களில் 90 சதவீதம் பேர் அனுப்பப்பட்டு தற்போது புதிய படை, லடாக் எல்லையில் சுற்றி நிறுத்தப்பட்டிருப்பதாக ராணுவ வட்டார தகவல்கள் உறுதி செய்துள்ளன.

  சீனாவின் இந்த நடவடிக்கையை இந்திய ராணுவம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம்.நாரவனே, லடாக் படைதளத்திற்கு அடிக்கடி சென்று வருகை தந்து நிலைமையைச் சமாளிக்க தேவையான நடவடிக்கைகளை ஆய்வு செய்து செயல்படுத்தி வருகிறார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்ளிட்டோரை கொண்ட சீனா ஆய்வு குழுவும், நிலைமையை கையாள்வது குறித்த ஆலோசனைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது.

2 ஆண்டுக்கு ஒருமுறை மாற்றம்

இந்திய ராணுவத்தை பொறுத்த வரை, உயரமான மலை எல்லைகளில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை படைகளை முழுமையாக மாற்றுவது வழக்கம். ஆண்டுக்கு ஒருமுறை 40-50 சதவீத வீரர்கள் சுழற்சி முறையில் மாற்றப்படுவார்கள். சில சமயங்களில், இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் 2 ஆண்டுகளுக்கும் அதிகமாக ஒரே இடத்தில் தங்கி பணியாற்றுவதும் வழக்கம்.

காஷ்மீர் எல்லை பகுதியில் 8,000 பதுங்கு குழி தயார்

காஷ்மீர் எல்லை பகுதியில் உள்ள இந்திய முகாம்கள் மட்டுமின்றி, எல்லையோர கிராமங்களின் மீதும் பாகிஸ்தான் ராணுவம் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், மக்கள் கொல்லப்படுகின்றனர். இதனால், பாகிஸ்தான் உடனான எல்லைக் கட்டுப்பாடு கோடு மற்றும் சர்வதேச எல்லையை ஒட்டிய ஜம்மு, கதுவா, சம்பா, பூஞ்ச், ரஜோரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த எல்லையோர கிராமங்களில் மக்களின் பாதுகாப்புக்காக 14,460 பதுங்கு குழி அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருந்தது. இதுதவிர, அதிக பாதிப்புள்ள கிராமங்களில் மேலும் 4,000 பதுங்கு குழி அமைக்க சமீபத்தில் அனுமதி தரப்பட்டுள்ளது. இதில், 7,923 பதுங்கு குழிகள் அமைத்து முடிக்கப்பட்டு உள்ளதாக ராணுவ செய்தி தொடர்பாளர் கூறி உள்ளார். 6,964 தனிநபர் பதுங்கு குழிகளும், 959 சமூக பதுங்கு குழிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இன்னும் 9,905 பதுங்கு குழிகள் அமைக்கும் பணி பல்வேறு கட்டங்களில் உள்ளது.

Related Stories: