நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தாவை தோற்கடித்த பாஜக எம்எல்ஏ சுவேந்து மீது திருட்டு வழக்கு: நிவாரண பொருட்களை திருடியதாக புகார்

கொல்கத்தா: முதல்வர் மம்தாவை நந்திகிராம் தொகுதியில் தோற்கடித்த எதிர்கட்சி தலைவரும், பாஜக எம்எல்ஏவுமான சுவேந்து அதிகாரி உள்ளிட்ட சிலர் மீது போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்துள்ளனர். மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்னர், எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் ஆளும் திரிணாமுல் கட்சிக்கும் நாளுக்கு நாள் மோதல் அதிகரித்து வருகிறது. பேரவை தேர்தலுக்கு முன்பு, திரிணாமுல் கட்சியை விட்டு விலகி பாஜகவில் சேர்ந்த சுபேந்து அதிகாரி, நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்டார். அதே தொகுதியில் திரிணாமுல் தலைவரான மம்தா பானர்ஜியும் போட்டியிட்டார்.

ஆனால், இந்த தொகுதியில் மம்தா தோல்வியுற்றாலும், அவரது தலைமையிலான கட்சி பெரும்பான்மை பலத்துடன் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது. சட்டமன்றத் தேர்தல்கள் முடிந்ததும், ‘யாஸ்’ சூறாவளி புயல் தொடர்பாக பிரதமர் மோடி பங்கேற்ற ஆய்வு கூட்டத்தில் முதல்வர் மம்தா கலந்து கொள்ளவில்லை. இதனால், மாநில அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் அதிகரித்தது. அதன்தொடர்ச்சியாக மேற்குவங்க தலைமைச் செயலாளராக இருந்த அலபன் பந்தோபாத்யாவை மத்திய அரசு டெல்லிக்கு அழைத்தது.

இருப்பினும், அவர் டெல்லிக்குச் செல்வதற்கு முன்பு தனது பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின்னர், அவரை தனது தலைமை ஆலோசகராக மம்தா பானர்ஜி நியமித்துக் கொண்டார். இந்த விவகாரம், மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே நீடித்து வருகிறது. முன்னதாக தேர்தல் முடிவுக்கு பின்னர், சுபேந்து அதிகாரியின் தந்தை ஷிஷிர் ஆதிகாரி மற்றும் சகோதரர் திவேண்டு அதிகாரி, 70 பாஜக எம்எல்ஏக்கள் என பலருக்கு சிஆர்பிஎஃப் வீரர்களின் பாதுகாப்பை வழங்கியுள்ளது.

இந்நிலையில், சட்டமன்ற எதிர்கட்சி தலைவரும், எம்எல்ஏவுமான சுபேந்து அதிகாரி மற்றும்  அவரது சகோதரர் திவேண்டு அதிகாரி ஆகியோர், நகராட்சியில் அலுவலகத்தில் இருந்த நிவாரணப் பொருட்களை அள்ளிச் சென்றதாக கூறி, அவர்கள் மீது திரிணாமுல் கட்சியினர் போலீசில் புகார் அளித்தனர். அதையடுத்து, சுவேந்து மற்றும் அவரது தம்பி உள்ளிட்டோர் மீது போலீசார் திருட்டு வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: