மாமல்லபுரம் இசிஆர் சாலையில் ஊரடங்கு விதிமீறல்: போலீசார் கண்டுகொள்ளாததால் களத்தில் இறங்கிய செங்கை. ஆர்டிஓ

மாமல்லபுரம்: மாமல்லபுரம் இ.சி.ஆர்., சாலையில் முழு ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காமல் சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி செங்கல்பட்டு ஆர்.டி.ஓ. அபராதம் விதித்து கடுமையாக எச்சரித்து அனுப்பினார். தமிழகத்தில் கொரோனா 2வது அலை அதிகமாக பரவியதையடுத்து தமிழக அரசு தளர்வுகள் இன்றி முழு ஊரடங்கினை அமல்படுத்தியது. இதையடுத்து திருமணம், நிச்சயதார்த்தம், துக்க நிகழ்வுகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளுக்கு செல்பவர்கள் கண்டிப்பாக இ-பாஸ் பெற்றுதான் வாகனங்களில் பயணிக்க  வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை பின்பற்றாமல் சென்றால் அபராதம் விதித்து வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இ.சி.ஆர், ஓ.எம்.ஆர் சாலை மற்றும் திருக்கழுக்குன்றம் செல்லும் சாலைகளில் ஏராளமான வாகனங்கள் இ-பாஸ் இல்லாமல் சென்று வருகின்றன. இதனை தடுத்து நிறுத்த மாமல்லபுரம் போலீசார் எவ்வித  நடவடிக்கையும் எடுக்காகாதது வேதனையளிப்பதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து,  நேற்று காலை மாமல்லபுரம் வந்த செங்கல்பட்டு ஆர்டிஓ சுரேஷ் பூஞ்சேரி கூட்ரோட்டில் ஏராளமான வாகனங்கள் சென்றதை கண்டு, உடனே காரில் இருந்து இறங்கி அவ்வழியாக சென்ற வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினார். அப்போது, தேவையில்லாமலும், இ-பாஸ் இல்லாமலும் சென்ற லாரி, கார், பைக் உள்ளிட்ட வாகனங்களுக்கு மொத்தம் ரூ.15,500 ரூபாய் அபராதம் விதித்தார். அப்போது இ-பாஸ் இல்லாமல் பொய்யான காரணங்களை கூறி தப்பிக்க முயன்றவர்களிடம்,  அடுத்த முறை இ-பாஸ் இல்லாமல் பயணம் செய்தால் அபராதம் விதிப்பதோடு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என கடுமையாக எச்சரித்து அனுப்பினார்.  அப்போது, திருக்கழுக்குன்றம் தாசில்தார் துரைராஜ், மண்டல இடத்து துணை வட்டாச்சியர் மணிவண்ணன், மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ், போலீஸ் எஸ்.ஐ குப்புசாமி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: