முதல்வருக்கு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் சங்கம் கோரிக்கை

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தமிழ்நாடு உதவிக்கரம் மாற்றுத்திறனாளர் நல்வாழ்வு சங்க மாநில பொதுச் செயலாளர் டாக்டர் ஆவின் கி கோபிநாத் அனுப்பியுள்ள கோரிக்கை: சட்டமன்ற தேர்தலில், அமோக வெற்றி பெற்று, முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்று, அனைத்து பிரிவு மக்களுக்கும் நல்லாட்சி வழங்கி வருவதற்கு பாராட்டுகிறேன். மேலும், மாற்றுத் திறனாளிகள் நலத்துறையினை, தங்களின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது, தங்களது அக்கறையையும், மனிதநேயத்தையும் வெளிப்படுத்துகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தாங்கள் எடுத்து வரும் பெரும் முயற்சி  மற்றும் நடவடிக்கைகளுக்கும், உயிரை பணயம் வைத்து, பணியாற்றிவரும் மருத்துவ துறையினருக்கும்,  முன்கள  பணியாளர்களுக்கும், பத்திரிகை துறை போன்றோரையும், அங்கீகரித்து சிறப்பு ஊக்கத்தொகை அறிவித்து, வழங்கி வருவதற்கு நன்றி தெரிவிக்கிறோம்.

மேலும் இந்த பேரிடர் காலத்தில், வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள, தமிழகத்தில்   உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவியாக ரூ.2500 வழங்கிட வேண்டும். கொரோனாவால் உயிரிழந்துள்ள, மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்தினருக்கும், ஊடக துறையினருக்கு அறிவித்துள்ளது போன்று ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் போன்ற அனைத்து சிறப்பு  வசதிகளும் கொண்ட, தனி வார்டுகள், படுக்கைகள், தமிழகம் முழுவதுமுள்ள, அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிறப்பு ஒதுக்கீடு செய்ய வேண்டும்.

Related Stories: