பிரெஞ்ச் ஓபன் தகுதி சுற்று: இந்திய வீரர்கள் சுமித் நாகல், ராமநாதன் வெற்றி

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தகுதி சுற்றுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் சுமித் நாகல் மற்றும் ராமநாதன் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். மற்றொரு வீரரான பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், ஜெர்மனி வீரர் ஒட்டேவிடம் தோல்வியடைந்தார். நேற்று நடந்த தகுதி சுற்று போட்டியில் சுமித் நாகல், இத்தாலி வீரர் ரொபர்ட்டோ மர்கோராவை எதிர்த்து மோதினார். ஏடிபி தரவரிசையில் தற்போது சுமித் நாகல் 136வது இடத்திலும், மர்கோரா 194ம் இடத்திலும் உள்ளனர். நேற்றைய போட்டியில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய சுமித் நாகல் 6-3, 6-3 என நேர் செட்களில் மர்கோராவை வீழ்த்தினார்.

இன்று நடைபெறும் 2வது தகுதி சுற்றுப் போட்டியில் சுமித் நாகல், சிலியை சேர்ந்த இளம் வீரரான அலெஜாண்ட்ரோ டபிலோவுடன் (23) மோதுகிறார். ஏடிபி தரவரிசையில் அலெஜாண்ட்ரோ தற்போது 163ம் இடத்தில் உள்ளார். கனடாவில் உள்ள டொரன்டோ நகரில் பிறந்த இவர், 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை கனடாவுக்காக சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றார். 2016ம் ஆண்டு சிலி நாட்டில் உள்ள சான்டியாகோ நகரில் குடியேறினார். இதையடுத்து, அந்நாட்டின் குடியுரிமை பெற்று, சிலியை சேர்ந்த வீரராக தற்போது சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வருகிறார். நேற்று நடந்த மற்றொரு தகுதி சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் ராம்குமார் ராமநாதன், அமெரிக்க வீரர் மிக்கேல் மோஹை எதிர்த்து மோதினார். ஏடிபி தரவரிசையில் ராமநாதன் தற்போது 215ம் இடத்திலும், மிக்கேல் மோஹ் 168வது இடத்திலும் உள்ளனர்.

இப்போட்டியில் முதல் செட்டை மிக்கேல் மோஹ் 6-2 என்ற கணக்கில் கைப்பற்றினார். ஆனால் அடுத்த செட்டில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராமநாதன், அந்த செட்டை 7-6 என டைபிரேக்கரில் கைப்பற்றினார். அதே எழுச்சியுடன் 3வது செட்டை 6-3 என ராமநாதன் கைப்பற்றி, இப்போட்டியில் வெற்றி பெற்றுள்ளார். அடுத்த தகுதி சுற்றில் உஸ்பெகிஸ்தானை சேர்ந்த டெனிஸ் இஸ்டோமினுடன், ராமநாதன்  மோதுகிறார். 34 வயதான இஸ்டோமின் தற்போது ஏடிபி தரவரிசையில் 156ம் இடத்தில் உள்ளார். மற்றொரு தகுதி சுற்றுப் போட்டியில் இந்திய வீரர் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், ஜெர்மனியை சேர்ந்த ஆஸ்கர் ஒட்டேவிடம் 2-6, 2-6 என நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறினார்.

Related Stories: