நாரதா வழக்கில் திரிணாமுல் தலைவர்களுக்கு வீட்டுக்காவல்!: கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. முறையீடு..!!

டெல்லி: நாரதா வழக்கில் கைது செய்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை வீட்டுக்காவலில் வைக்கும் கொல்கத்தா உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. முறையிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் நாரதா நியூஸ் இணையதளம் கடந்த 2014ம் ஆண்டில் ஸ்டிங் ஆப்ரேஷன் நடத்தி போலி நிதி நிறுவனம் ஒன்றுக்கு திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் ஆதரவாக பணம் பெற்ற காட்சிகளை வீடியோ எடுத்தது. இருப்பினும் 2016ம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாகத்தான் அந்த வீடியோ வெளியானது. இந்த நாரதா வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. இது தொடர்பாக மேற்கு வங்க அமைச்சர்கள் பிர்ஹாத் ஹக்கீம், சுப்ரதா முகர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மதன் மித்ரா மற்றும் திரிணாமுல் கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் சோவன் சாட்டர்ஜி ஆகியோரை சி.பி.ஐ. கைது செய்தது. 

இதையடுத்து கைது செய்யப்பட்ட நால்வரும் ஜாமீன் கோரி கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். நால்வருக்கும் ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம் நால்வரையும் வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டது. இந்நிலையில், கைது செய்யப்பட்டோருக்கு வீட்டு காவல் வழங்கப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. முறையிட்டுள்ளது. இது தொடர்பான தங்கள் மனுவை உடனடியாக இன்றே விசாரிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. கோரியுள்ளது. இந்த வழக்கு விசாரணையை நிறுத்த முயற்சிகள் நடந்துள்ளதாக சி.பி.ஐ. குற்றம் சாட்டியுள்ளது.

Related Stories: