நெல்லூர் அருகே மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா லேகியம் வாங்க குவிந்த நோயாளிகள்

* 40,000க்கும் மேற்பட்டோர் வந்ததால் பரபரப்பு

* ஆயுஷ் அமைச்சகத்தின் ஆய்வுக்கு அனுப்பினர்

திருமலை: நெல்லூரில் கொரோனாவுக்கு லேகியம் சாப்பிடுபவர்கள் முழுமையாக குணமடைந்து வருவதாக தகவல் பரவியதால், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் பலர் வார்டை காலி செய்து விட்டு லேகியம் வாங்க குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. யிரக்கணக்கான மக்கள் திரண்டதால் லேகியம் வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த லேகியத்தை ஆய்வு செய்ய, ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.ஆந்திர மாநிலம் நெல்லூர் அடுத்த முத்துக்கூறு பகுதியில் கொரோனா பாதித்தவர்களுக்கு ஆறு வகையான ஆயுர்வேத லேகியம் தயார் செய்து இலவசமாக வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. இந்த லேகியம் சாப்பிட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு குணமடைந்ததாகவும், பக்கவிளைவுகள் எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் நாளுக்கு நாள் பொதுமக்களின் கூட்டம் அதிகரித்தது. தினமும் 3 ஆயிரம் பேருக்கு மட்டுமே வழங்கும் அளவிற்கு லேகியம் தயாரிக்கப்பட்டது. இத்தகவலறிந்த கலெக்டர் சக்ராதர் லேகியத்தை ஆய்வு செய்ய மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்து, ஆய்வறிக்கை வரும் வரை மருந்து வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார். இதனால் 2 நாட்களாக மருந்து வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் வந்ததால் நேற்று காலை எம்எல்ஏ காக்கானி கோவர்தன் தலைமையில் மீண்டும் லேகியம் வழங்குவது தொடங்கப்பட்டது. இதனை அறிந்த சுற்றுப்புற கிராமத்தினர் மற்றும் நெல்லூர் மற்றும் இதர மாவட்டத்தை சேர்ந்த கொரோனா நோயாளிகள், முத்துக்கூறு கிராமத்தை நோக்கி படையெடுக்க தொடங்கினர். அதேபோன்று பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் ஆம்புலன்ஸ்களில் முத்துக்கூறு கிராமத்தை நோக்கி படையெடுக்க தொடங்கினர். சுமார் 40,000 பேர் வரை கூடினர். போலீசாராலும் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கட்டுக்கடங்காத கூட்டம் ஒரே இடத்தில் கூடியதால், கொரோனா பாதிப்பு பரவும் ஆபத்து இருப்பதாலும், லேகியத்தின் செயல்பாடுகள் தெரியாததால் மீண்டும் தற்காலிகமாக லேகியம் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே கொரோனா தடுப்பு லேகியம் குறித்தும், அதன்செயல்பாடுகள் குறித்தும் அதிகாரிகளிடம் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நேற்று ஆய்வு நடத்தினார். பின்னர் மருத்துவ நிபுணர் குழுவிற்கு ஆய்வு செய்து, அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டார். லேகியம் வழங்குவது நிறுத்திய பின்னரும் அங்கு கூட்டம் குவிந்த வண்ணம் இருந்தால் தொடர்ந்து பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து ஆயுர்வேத லேகியம் இலவசமாக வழங்கி வரும் ஆனந்தய்யா கூறியதாவது: எனது ஆன்மீக குருவான குருவய்யா சுவாமி எனது கனவில் வந்து, கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்படும் மக்களுக்கு இந்த லேகியத்தை வழங்கும்படி கூறினார். அவரது வழிகாட்டுதலின் படி இந்த ஆயுர்வேத லேகியத்தை தயார் செய்து பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறோம். இதில் வேப்பிலை, மா இலை, வால் மிளகு, திப்பிலி, மஞ்சள், ஜாதிக்காய் உள்ளிட்ட பல்வேறு மூலிகை பொருட்களை கொண்டு இந்த லேகியம் தயார் செய்யப்படுகிறது. இந்த லேகியத்தின் மூலம் கொரோனா வருவதற்கு முன்பும், நுரையீரலை சுத்தம் செய்வதற்கும், வைரல் காய்ச்சல் போன்றவற்றை சரி செய்வதற்கும் மிகவும் பயன் உள்ளதாக இருக்கும். மேலும், ரத்தத்தில் ஆக்சிஜன் அளவு குறைந்தவர்களுக்கும், வாந்தி, மயக்கம், வயிற்றுப்போக்கு போன்ற நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இந்த ஆறு விதமான லேகியம் வழங்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.

காலியானது மருத்துவமனை

ஆந்திர மாநிலத்தில் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள், நெல்லூர் அடுத்த முத்துக்கூறு கிராமத்தில் வழங்கும் லேகியம் சாப்பிட்டால் கொரோனா குணமாவது தெரியவந்ததால், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அங்கிருந்து ஆம்புலன்ஸ்களில், லேகியம் வாங்க புறப்பட்டனர். இதனால் மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகள் காலியாக காணப்பட்டது. லேகியம் வழங்கும் இடத்தை சுற்றி, பொதுமக்கள் வந்த வாகனங்கள் படையெடுத்து நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Related Stories: