ஒருநாளுக்கு 90 லட்சம் டோஸ் போடணும் ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி: மத்திய அரசு இலக்கு

புதுடெல்லி: இந்த ஆண்டு இறுதிக்குள் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி 15ம் தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. சுமார் 120 நாட்களை கடந்து விட்ட நிலையில் தற்போது 18 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சராசரியாக ஒருநாளைக்கு 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தற்போதைய நிலையில், 18 வயதுக்கு மேற்பட்டோர் 94 கோடி என கணக்கிடப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருக்கும் இந்த ஆண்டு இறுதிக்குள் தடுப்பூசி போட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்த 4 மாதத்தில் தடுப்பூசி போடும் வேகம் மிகக் குறைவாகவே உள்ளது. ஆனாலும், ஜூலை இறுதியில் தடுப்பூசி விநியோகம் வேகம் எடுக்கும் என அரசு மதிப்பிட்டுள்ளது.

ஜூன் மாதம் 10 கோடி, ஜூலையில் 15 கோடி தடுப்பூசிகள் சப்ளை செய்வதாக உற்பத்தி நிறுவனங்கள் கூறி உள்ளன. எனவே ஆகஸ்ட் - டிசம்பர் வரை 5 மாதம் தினசரி 90 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட முடியும் என அரசு நம்புகிறது. இதற்கு தற்போதைய எண்ணிக்கையை காட்டிலும் அதிகப்படியான தடுப்பூசி மையங்களும், மனித ஆற்றலும் அவசியமாகும். ஜூலைக்குப் பிறகு தடுப்பூசி உற்பத்தி வேகம் எடுக்கும் என்பதால் அரசு மதிப்பிட்டபடி 200 கோடி டோஸ்கள் கிடைக்கலாம்.

பைசர் வருகிறது

தற்போதைய தடுப்பூசிகளில் அதிக செயல்திறன் (95 சதவீதம்) கொண்டிருப்பது அமெரிக்க நிறுவனத்தின் பைசர் தடுப்பூசியாகும். இதை இந்தியாவில் இறக்குமதி செய்ய மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்துகிறது. நடப்பாண்டின் மூன்றாம் காலாண்டில் 5 லட்சம் பைசர் தடுப்பூசி வாங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வீடு தேடி தடுப்பூசி ஐஎம்ஏ வலியுறுத்தல்

தடுப்பூசி போடும் வேகத்தை அதிகரிக்க, வீடு தேடிச் சென்று தடுப்பூசி போட வேண்டுமென இந்திய மருத்துவர்கள் சங்கள் வலியுறுத்தி உள்ளது. அதன் அறிக்கையில், ‘‘தடுப்பூசி போடுவதில் அரசு தனது கொள்கையை மாற்றிக் கொள்ள வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்டவர்களை பாதுகாக்கக் கூடிய ஒரே வழி தடுப்பூசி போடுவதுதான். எனவே, அனைவருக்கும் தடுப்பூசி வீடுதேடிச் சென்று போட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கூறப்பட்டுள்ளது.

Related Stories: