சாமளாபுரம் குளத்தில் மராமத்து பணிகளில் முறைகேடு: சமூக ஆர்வலர்கள் புகார்

பொங்கலூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் வட்டம் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சுமார் 110 ஏக்கர் பரப்பளவுள்ள சாமளாபுரம் குளம் அமைந்துள்ளது. கோவை நொய்யல் ஆற்றிலிருந்து சூலூர் வழியே சாமளாபுரம் குளத்தை கடந்து திருப்பூர் ஆற்றில் தண்ணீர் கலக்கும் விதமாக இந்த சாமளாபுரம் குளம் அமைந்துள்ளது. மேலும் மழை மற்றும் இயற்கை பேரிடர் காலங்களில் இந்த குளமானது நிரம்பி வழிந்து கடல்போல் காட்சி அளிப்பதாகவும் அப்பகுதியினர் கூறுகின்றனர். சாமளாபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாய நிலங்களுக்கும், கால்நடைகளுக்கும் இந்தக் குளம் நீராதாரமாக விளங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.

உள்ளூர் மட்டுமின்றி வெளிநாட்டு பறவைகளும் இங்கு அதிக அளவில் வந்து தங்கி இனப்பெருக்க காலம் முடிந்து செல்லும் என்றும் அப்பகுதியினர் கூறுகின்றனர். இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அப்போதைய அரசின் சார்பில் நடைபெற்ற குடிமராமத்து பணியில் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 22 குளங்களும் வாய்க்கால்களும் ரூ.240 கோடியில் பராமரிக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. அதன்படி பொதுப்பணித்துறை மூலம் சாமளாபுரம் குளத்தில் கரையை பலப்படுத்தி கருங்கற்கள் பதிக்கும் பணியானது ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சாமளாபுரம் குளத்தில் நடைபெறும் பணிகளிள், காலக்கெடு, மதிப்பீடு எவ்வளவு? என்பது குறித்து மக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் ஒப்பந்த நிறுவனம் எந்த ஒரு அறிவிப்பு பலகையையும் வைக்காமல் இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே கரையில் பதிக்கப்பட்டிருந்த கற்களையும் கணக்கில் சேர்த்துக்கொண்டு இத்திட்டத்தில் பல லட்சம் ரூபாய் மோசடி முறைகேடுகள் நடைபெற்று வருவதாக அப்பகுதியினர் கூறுகின்றனர். குளத்தின் மேல்கரையில் சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவிற்கு இருந்த மண் பாதையில் ரூ.1 கோடி செலவில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில் குளத்திற்கும், சாலைக்கும் இடையே நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டுள்ளது போன்ற இரும்பு தடுப்பு வேலி அமைக்கப்படவில்லை என்றும் தரமான சாலை போடப்படவில்லை என்றும் புகார்கள் எழுந்துள்ளன.

இதனால் நீர்வரத்து அதிகமானால் சாமளாபுரம் குளத்தின் கரை உடைந்து அருகிலுள்ள பள்ளபாளையம் கிராமத்தையே அழித்துவிடும் என்றும் அப்பகுதியினர் வேதனை தெரிவிக்கின்றனர். உடனடியாக தற்போது ஆட்சி பொறுப்பை ஏற்றிருக்கும் திமுக அரசு அதிகாரிகள் மூலம் சாமளாபுரம் குளத்தை ஆய்வு செய்து மோசடி முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும். அவ்வாறு மோசடி நடைபெற்று இருக்கும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தரமற்ற தார் சாலை, தரமற்ற குளக்கரையை அமைத்து வரும் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். திருப்பூர் மாவட்டத்தின் முதல் கலெக்டர் சமயமூர்த்தி அறிவித்தபடி சாமளாபுரம் குளத்தை தூர்வாரி நீராதாரத்தை தேக்கிவைத்து, பறவைகள் சரணாலயமாக அறிவித்து, பூங்கா அமைத்து பல்லடம் பகுதி மக்களின் சிறந்த பொழுதுபோக்கு தலமாக மாற்ற அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதியிலுள்ள சமூக ஆர்வலர் மற்றும் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: