முதல் தவணை கோவாக்சின்... 2வது கோவிஷீல்டு மாற்றிப்போடப்பட்ட தடுப்பூசி முதியவருக்கு நேர்ந்த சோகம்: மகாராஷ்டிராவில் நடந்த குளறுபடி

மும்பை: முதல் தவணையாக கோவாக்சின் போட்டுக் கொண்ட 72 வயது முதியவருக்கு, 2வது தவணையாக கோவிஷீல்டு போட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் ஜால்னா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் தத்தாத்ரேயா வாக்மரே (72). இவர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி, ஊரக மருத்துவமனை ஒன்றில் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். கோவாக்சின், பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இந்நிலையில், 2வது தவணையாக கடந்த ஏப்ரல் 30ம் தேதி 2வது தவணை தடுப்பூசி போடுவதற்காக, அவரது கிராமத்தில் உள்ள சுகாதார மையத்துக்கு சென்றுள்ளார். அங்கு இருந்த சுகாதார பணியாளர், அவருக்கு தடுப்பூசி போட்டனர். இதன்பிறகு வீட்டுக்கு வந்த அவருக்கு, லேசான காய்ச்சல், உடலின் சில பகுதிகளில் தோல் அழற்சி மற்றும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக, பார்டூர் பகுதியில் உள்ள சுகாதார மையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. இதுகுறித்து வாக்மரேயின் மகன் திகம்பர் கூறியதாவது: 2வது தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகு, எனது தந்தைக்கு காய்ச்சல், தோல் அழற்சி ஏற்பட்டதால் பதற்றம் அடைந்தோம். உடனடியாக சுகாதார மையத்தில் சேர்த்து அவருக்கு சிகிச்சை வழங்கினோம். அவரது தடுப்பூசி இறுதி சான்றிதழை பார்த்தபோது, அதில் கோவிஷீல்டு என போடப்பட்டிருந்தது. அப்போதுதான் எங்களுக்கு குளறுபடி தெரிந்தது. அவர் முதலில் கோவாக்சின் போட்டுக் கொண்டுள்ளார். முதல் தவணை தடுப்பூசிக்கான சான்றிதழிலும் கோவாக்சின் என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை காண்பித்துதான் 2வது தவணை தடுப்பூசி போடப்பட்டது. ஆனால், சுகாதார பணியாளர்கள் இதைக்கூட கவனிக்காமல் அவருக்கு கோவிஷீல்டு போட்டு விட்டனர்.

எனது தந்தை படிப்பறிவற்றவர். எனக்கு கூட ஓரளவுதான் படிக்க தெரியும். இருப்பினும், சுகாதார பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் சரியான தடுப்பூசிதான் அளிக்கப்படுகிறதா என கவனிக்க வேண்டும். அவர்களது கடமை அது. இதுகுறித்து உள்ளூர் சுகாதார அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளோம் என்றார். இதுகுறித்து விசாரணை நடைபெறுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனாவால் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ள மக்கள், சோதனை மேல் சோதனை போதுமடா சாமி என்று புலம்பாத நாளில்லை. ஆனால், கொரோனாவில் இருந்து தப்பிக்க  தடுப்பூசி போட்டவருக்கு, சுகாதார பணியாளர்களின் அலட்சியத்தால் அதை விட பெரிய சோதனை நிகழ்ந்து விட்டது.

Related Stories:

>