முதிய தம்பதியின் பிரச்னைக்கு திண்டுக்கல் போலீசார் தீர்வு ஆறு பிள்ளைகள் பெற்றும் அரை வயிறு கஞ்சியில்லை: கடைசி மகளிடம் அனுப்பி வைத்தனர்

திண்டுக்கல்: திண்டுக்கல் ஆர்எம் காலனியை சேர்ந்தவர் பொன்னையா (79). இவரது மனைவி பாண்டியம்மாள் (69). இவர்களுக்கு 3 ஆண், 3 பெண் பிள்ளைகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். பொன்னையா, பாண்டியம்மாள் மட்டும் வாடகை வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். வாட்ச்மேன் வேலை பார்த்து வரும் பொன்னையாவிற்கு ஏற்கனவே இடது கை செயலிழந்து விட்டது. வயது மூப்பின் காரணமாக இருவருக்கும் உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, கொரோனா அலை காரணமாக பொன்னையாவிற்கு வேலை இல்லை. இதனால், கணவன், மனைவி இருவரும் ஒருவேளை சாப்பாட்டிற்கே மிகவும் கஷ்டப்படுகின்றனர்.

பெற்ற பிள்ளைகள் 6 பேர் இருந்தும் இவர்களை யாரும் கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பொன்னையா, தனது மனைவியுடன் நேற்று திண்டுக்கல் நகர் மேற்கு போலீசில் புகார் அளித்தார். புகார் மனுவில், ‘‘பெற்ற பிள்ளைகள் 6 பேர் இருந்தும் கொரோனா கால கட்டத்தில் ஒருவேளை சாப்பாடு கூட போடவில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்’’ என தெரிவித்திருந்தனர். இன்ஸ்பெக்டர் நாகராணி, எஸ்எஸ்ஐ சுப்பிரமணி ஆகியோர் உடனே அவரது வாரிசுகளை வரவழைத்து விசாரணை நடத்தினர். அனைவரிடமும் நடந்த பேச்சுவார்த்தை முடிவில், பொன்னையா, பாண்டியம்மாள் இருவரும் தங்களின் கடைசி மகளான மகேஸ்வரியிடம் செல்வதாக கூறினர். இதையடுத்து போலீசார் இருவரையும் மகேஸ்வரியுடன் அனுப்பி வைத்தனர்.

Related Stories:

>