சரக்கு வாகனங்களை பராமரிக்க பணிமனைகளை திறக்க அனுமதிக்க வேண்டும்: மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் கோரிக்கை

சென்னை: அத்தியாவசிய சரக்கு வாகனங்களை பராமரிக்கும் வகையில் பணிமனைகளை  திறக்க அனுமதிக்க வேண்டும் என அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அகில இந்திய  மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் தமிழக தலைவர் முருகன் வெங்கடாசலம், தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகத்தில் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி பால், குடிநீர், மருத்துவ பொருட்கள்,  காய்கறிகள், ரேஷன் பொருட்கள், ஆக்சிஜன் சிலிண்டர் போன்ற அத்தியாவசிய பொருட்களை சரக்கு வாகனங்கள் மூலம் ஏற்றிச்செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் சுமார் 25 சதவீத சரக்கு வாகனங்கள் அத்தியாவசிய  சரக்குகளை ஏற்றிக்கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.  

தமிழகத்தின் பல மாவட்டங்களில்  சரக்கு வாகனங்களின் பராமரிப்பு பணிகளான காற்று சரி செய்வது, ஆயில் மாற்றுவது, மெக்கானிக்கல் பழுது பார்ப்பது, பிரேக் சரி செய்வது போன்ற தினசரி செய்ய வேண்டிய பராமரிப்பு பணிகளை  மேற்கொள்ளும் பணிமனைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை. இந்த பணிகளை மேற்கொள்ளாவிட்டால் அத்தியாவசிய பொதுசேவை பாதிப்படையும். மேலும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகும். இதுகுறித்த புரிதல் இல்லாமல்,  காவல்துறையினர் பணிமனை அனுமதி அளிக்கவில்லை. பணிமனை பணியாளர்களை தடுத்தும், தாக்கியும் வருகின்றனர். இதேநிலை தொடர்ந்தால் அத்தியாவசிய பொது சரக்கு சேவை பணி பெருமளவில் பாதிப்புக்கு உள்ளாகும் நிலைமை  ஏற்படும். எனவே அத்தியாவசிய சரக்கு வாகனங்களை பராமரிப்பு பணி செய்யும் பணிமனைகள் திறக்கவும், பணிமனை பணியாளர்களை வேலை செய்யவும் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: