அரசின் தோல்விகளால் இன்னொரு ஊரடங்கு அவசியமாகிவிட்டது: பிரதமர் மோடிக்கு ராகுல் கடிதம்

புதுடெல்லி:  காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடிக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: தடுப்பூசி வழங்குவதில் உங்களது அரசிடம் தெளிவும், ஒருங்கிணைப்பும் இல்லை. கொரோனாவின் முதல் அலையை இந்தியா வெற்றிகொண்டுவிட்டது என்று அவசரமாக பிரகடனம் செய்து கர்வமடைந்தீர்கள். இதுபோன்ற அரசின் தவறுகளால் இன்று இந்தியா அபாய கட்டத்தில் உள்ளது. கொரோனா பரவலின் வேகம் மிகவும் தீவிரமடைந்து வருகிறது. கொரோனாவை கையாண்டு அரசு தோல்வியடைந்துள்ளதால் மற்றொரு தேசிய ஊரடங்கு தவிர்க்க முடியாததாகிவிட்டது.  கடந்த ஆண்டு ஊரடங்கால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளானார்கள். எனவே, மக்களின் மீது கருணை கொண்டு ஏழை குடும்பங்களுக்கு தலா ₹6 ஆயிரம் நிதி உதவியையும், தேவையான உணவு பொருட்களையும் வழங்க வேண்டும். ஒட்டுமொத்த இந்தியர்களுக்கும் தடுப்பூசி வழங்குவதை விரைவு படுத்துவதுடன், மாறி வரும் கொரோனா வைரஸை கண்காணிக்கவும் வேண்டும்’ என குறிப்பிட்டுள்ளார்.

குப்பை... குற்றம்...

ராகுல் வெளியிட்டிருக்கும் டிவிட்டர் பதிவில், ‘நாடு கொரோனாவில் தத்தளித்துக் கொண்டிருக்கும்போதும் சென்ட்ரல் விஸ்டா திட்டம் தடையில்லாமல் நடந்து வருகிறது. இது குப்பைக்கு நிகரானது. கிரிமினல் குற்றம். பொதுமக்களுக்கு உதவுவதில் கவனம் செலுத்துங்கள்’ என்று மத்திய அரசை கடுமையாக சாடியுள்ளார்.

அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட சோனியா வலியுறுத்தல்

கொரோனா இரண்டாவது அலை பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில், நமது நிர்வாக அமைப்புகள் தோல்வியடையவில்லை. மாறாக, மோடி தலைமையிலான மத்திய அரசு, நாட்டு மக்களிடம் முழுமையாகத் தோல்வியடைந்து விட்டது. நிலைமையை சமாளிக்க, மத்திய அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டவேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: