கொரோனா 2வது அலை விவகாரம் உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக தேர்தல் ஆணையம் மேல்முறையீடு: உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்

புதுடெல்லி: கொரோனா காலத்தின் 2வது அலை இருக்கும் விவகாரத்தில் உரிய விதிமுறைகளை பின்பற்றாமல் தேர்தலை நடத்தியதற்காக கொலைக்குற்றம் கூட சுமத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் மேல்முறையீடு செய்துள்ளது. தமிழகத்தில் கரூர் தொகுதியில் அதிமுக வேட்பாளரான விஜயபாஸ்கர் தனது தொகுதியில் உரிய கொரோனா விதிமுறைகளை அமல்படுத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, தேர்தல் நேரத்தில் கடுமையான கொரோனா விதிமுறை மீறல்கள் ஏற்பட்டபோதும் அதனை தடுக்க தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

நீதிமன்றங்கள் பல உத்தரவுகளை பிறப்பித்தும் அதனை அமல்படுத்த அதனை நடைமுறைப்படுத்த தலைமை தேர்தல் ஆணையம் முயற்சி செய்யவில்லை. தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு இவ்வளவு அதிகமாக இருப்பதற்கு தேர்தல் ஆணையத்தின் மெத்தனப் போக்கு தான் காரணம். இதற்காக அவர்கள் மீது கொலைக் குற்றம் கூட சுமத்தலாம் என காட்டமாக கூறியிருந்தது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் கருத்துக்கு எதிராக தேர்தல் ஆணையத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,” உயர் நீதிமன்றத்தின் இந்த கருத்து, தேர்தல் ஆணையத்துக்கு பெருத்த சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. நாடு முழுவதும் பரவலாக தேர்தல் ஆணையத்தின் மீதான கடுமையான விமர்சனங்கள் எழுந்ததற்கும் காரணமாக அமைந்துள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: