உளுந்து பயறுக்கு அரசு கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கம் வலியுறுத்தல்

மயிலாடுதுறை: விவசாயிகளிடம் உள்ளுர் வியாபாரிகள் கொள்முதல் செய்யும் உளுந்து பச்சைப் பயிறுக்கான விலையைக் காட்டிலும் அரசு கொள்முதல் செய்யும் குறைந்தபட்ச ஆதாரவிலை மிகவும் குறைவானது என்பதால் அதனை உயர்த்தி கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கவும், தனியார் வியாபாரிகள் சிண்டிகேட் அமைத்து விவசாயிகள் வயிற்றில் அடிப்பதை தடுக்க நடவடிக்கை வேண்டும் என்று காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கத்தலைவர் குருகோபிகணேசன் தமிழக ஆளுனருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:

தமிழகத்தில் குறிப்பாக டெல்டா பகுதிகளில் நஞ்சை தரிசில்உளுந்து பச்சைப்பயறு சாகுபடி என்பது மிகவும் செலவு குறைந்த விவசாயிகளுக்கு வருமானம் ஈட்டக்கூடிய ஒன்றாக இருந்து வந்தது.

நெற்பயிரில் நஷ்டம் ஏற்பட்டாலும் நஞ்சை தரிசு உளுந்து பயறு விளைச்சல் அதனை ஈடுகட்டி விடும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக நெற்பயிரிலும், உளுந்து பயறு சாகுபடியிலும் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. பருவம் தப்பி பெய்யும் மழை மற்றும் வறட்சி, ஆட்கள் பற்றாக்குறை சம்பள உயர்வு, உரம் பூச்சி மருந்து விலை உயர்வு எதிர்பார்க்கும் மகசூலின்மை, டீசல் டிராக்டர் வாடகை உயர்வு ஆகியவற்றால் விவசாயிகளுக்கு உளுந்து பயறு சாகுபடி போதிய வருமானம் கொடுக்கவில்லை. மேலும் 2015-16ல் இதே நஞ்சை தரிசு உளுந்து குவிண்டால் ரூ.12 ஆயிரத்திற்கும் பச்சைப்பயறு குவிண்டால் ரூ.11 ஆயிரத்திற்கும் விலைபோனது, கடந்த ஐந்தாறு ஆண்டுகளாக தமிழக வியாபாரிகள் சிண்டிகேட் போடுவதால் உளுந்து பயறு விலை அடிமாட்டு விலைக்கு விவசாயிகள் விற்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடன் கைமாற்று வாங்கிய விவசாயிகள் கடனை அடைக்க முடியாமல் தவறான முடிவுக்கு தள்ளப்படுகின்றனர்.

வடமாநில வியாபாரிகள் தமிழகத்திற்கு வந்து கிலோ ரூ.120க்கு குறையாமல் வாங்கிச்சென்றனர், ஆனால் தமிழக வியாபாரிகள் சிண்டிகேட் போட்டுகொண்டு வடமாநில வியாபாரிகளை வரவிடாமல் தடுத்துவிட்டனர். உள்ளுர் வியாபாரிகள் குவிண்டால் ரூ.8 ஆயிரத்திற்கு வாங்கிகொண்டிருந்த நிலையில் தற்பொழுது அரசு குறைந்தபட்ச ஆதார விலையாக உளுந்து கிலோ ரூ.60 என்றும் பயறு ரூ.71.96 என்றும் நிர்ணயித்துள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் நொந்து போயுள்ளனர். உள்ளூர் வியாபாரிகள் மூலம் கொஞ்சநஞ்சம் அதிகரித்துக் கிடைத்த விலையும் அரசின் அறிவிப்பால் நஷ்டத்தை ஏற்படுத்திவிட்டது. ஆகவே ஆளுனர் சிண்டிகேட் போட்டிருக்கும் தமிழக உளுந்து பயறு வியாபாரிகள்மீது நடவடிகை எடுத்து ஐந்தாறு ஆண்டுகளுக்கு முனபு விற்பனையான குவிண்டால் ரூ.12 ஆயிரம் விலைகே விற்பனை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் என அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: