கள்ளச்சந்தையில் ரெம்டெசிவிர் மருந்து விற்பனை: முக்கிய குற்றவாளி உள்பட 10 பேர் கைது

சென்னை: . ரெமிடெசிவிர் மருந்தை கள்ளச்சந்தையில் விற்க முயன்ற முக்கிய குற்றவாளி உள்பட 10 பேர் கைது  செய்யப்பட்டனர். திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒப்பந்த ஊழியராக பணியாற்றும் விக்னேஷ் (26)   என்பவர் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளச் சந்தையில் வாங்கி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும்  மருந்தகங்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார். இதையறிந்த சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த மருத்துவர் முகமது  இம்ரான், ரூ.4,800 மதிப்புள்ள மருந்தை, விக்னேஷிடம் ரூ.8500 ரூபாய்க்கு வாங்கி  கள்ளச் சந்தையில் 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை  செய்ய திட்டமிட்டார். இதற்காக தனது நண்பர் விஜய் என்பவருடன் திருவண்ணாமலை சென்று விக்னேஷிடம் ரெம்டெசிவிர்  மருந்து வாங்கி வந்தார்.

  இத் தகவல் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை எஸ்.பி சாந்திக்கு கிடைத்தது. குற்றப்புலனாய்வு பிரிவு  போலீசார்  இருவரையும் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில்,  இவர்களிடமிருந்து மருந்தை வாங்கி  விற்பனை செய்ய முயற்சித்த ராஜ்குமார்(33) என்பவரும் கைதானார். இதனையடுத்து, இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய  குற்றவாளியான விக்னேஷும்  கைதானார். இதைத்தொடர்ந்து ஒப்பந்த ஊழியர் பணியிலிருந்து அவரை திருவண்ணாமலை அரசு  மருத்துவமனை டீன் டிஸ்மிஸ் செய்தார்.

மருத்துவ உதவியாளர், நர்ஸ் கைது:  சென்னை ஐசிஎப் பகுதியில் ரெம்டெசிவிர் மருந்தை தனியார் மருத்துவ ஊழியர் ஒருவர்  கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வருவதாக திருவல்லிக்கேணி மருந்துகட்டுபாட்டு துறை ஆய்வாளர் முரளி  கிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அரசு ஸ்டான்லி மருத்துவமனை நுண்ணறிவு பிரிவு காவலர் சுரேஷ் மூலம், தனியார் மருத்துவ ஊழியரை செல்போனில்  தொடர்புகொண்ட போலீசார் தங்களுக்கு 2 ரெமிடெசிவிர் மருந்து உடனடியாக தேவைப்படுவதாக தெரிவித்தனர். இதனை  நம்பிய அந்த நபர் நேற்று மதியம் 2 ரெமிடெசிவிர் மருந்துடன் ஐசிஎப் வடக்கு காலனி கமல விநாயகர் கோயில் அருகே  காத்திருந்தார்.

அப்போது, அங்கு வந்த காவலர் சுரேஷிடம் மருந்தை கொடுத்துவிட்டு, ரூ.30 ஆயிரம் பெற்றார். அப்போது அங்கு மறைந்திருந்த  ஐசிஎப் உதவி ஆய்வாளர் மகேஷ் தலைமையிலான போலீசார் மற்றும் மருந்துகட்டுபாட்டு அதிகாரிகள் அந்த நபரை சுற்றி  வளைத்து கைது செய்தனர். அவர் வில்லிவாக்கத்தை சேரந்த கார்த்திகேயன்(33) என்பதும், தனியார் மருத்துவமனையில் பார்மசி  உதவியாளராக பணியாற்றி வருவதும் தெரிந்தது. அவர் தந்த தகவலின்பேரில், அதே மருத்துவமனையில் நர்சாக  பணிபுரியும் ஜாபர் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

அதே போல், புரசைவாக்கம் பகுதியில் சிலர் ரெம்டெசிவிர் மருந்தை கள்ளத்தனமாக ரூ.15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ய  முயற்சித்தது தெரியவந்தது. ஜி-1 வேப்பேரி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினர் கோடம்பாக்கம்  பகுதியை சேர்ந்த சாம்பசிவம் (46) மற்றும் வேலூரை சேர்ந்த ராமு (29) ஆகிய 2 நபர்களிடம் விசாரித்தனர். விசாரணையில்  அவர்கள் தனியார் மருத்துவமனை மருந்தகத்தில் மருந்துகளை திருடி விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.  அவர்களிடமிருந்த 6 ரெம்டெசிவிர் மருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட 2 நபர்கள் மீது சட்ட  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மருத்துவர், மருந்துக்கடை உரிமையாளர் சிக்கினர்: பழைய பல்லாவரத்தை சேர்ந்த மருத்துவர் ஜான்கிங்லி (41) என்பவரும்,  அவருக்கு உடந்தையாக இருந்து மருந்து கடையில் ரெம்டெசிவிர் மருந்தை அதிக விலைக்கு விற்பனை செய்த மருந்துக் கடை  உரிமையாளர் பெருமாள்(30) என்பவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 11 டோஸ்  ரெம்டெசிவிர் மருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இருவரையும் பல்லாவரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்த நிலையில்,  அங்கு முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.

Related Stories: