தொழில் நிறுவனங்களுக்கு ஆக்சிஜன் சப்ளை நிறுத்தப்பட்டதால் 2 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்: மருத்துவ தேவைக்குபோக 20 சதவீதத்தை தர கோரிக்கை

கோவை:  கோவையில் தொழில் நிறுவனங்களுக்கு ஆக்சிஜன் நிறுத்தப்பட்டதால் ஆயிரக்கணக்கான சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்  நிறுவனங்களும் 100-க்கு மேற்பட்ட பெரிய தொழில் நிறுவனங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் 2 லட்சம் தொழிலாளர்கள் வேலையிழக்கும்  அபாயம் உள்ளது. இதனை தவிர்க்க மருத்துவ தேவைகளுக்கு போக 20 சதவீதம் ஆக்சிஜன் சப்ளை செய்யவேண்டுமென கோரிக்கை  விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, லேசர் கட்டிங் தொழில்நிறுவன உரிமையாளர் செல்வராஜ் கூறியதாவது:  கோவையில் ஆயிரக்கணக்கான சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உள்ளன. அதேபோல் ஆக்சிஜன் மூலம் இயந்திரங்களுக்கு  தேவையான இரும்பு, எஸ்.எஸ். போன்ற பொருட்கள் மற்றும் உதிரிபாகங்களை கட்டிங் செய்து கொடுக்கும் நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில்  உள்ளன. இதுதவிர நூற்றுக்கும் மேற்பட்ட பெரிய நிறுவனங்கள் தங்கள் நிறுவனங்களிலேயே இந்த பணிகளை மேற்கொள்ளும் வகையிலும்  உள்ளன.

கொரோனா 2வது அலை காரணமாக மருத்துவ தேவைக்களுக்காக ஆக்சிஜன் தேவைப்படுவதால் மத்திய அரசு நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 24ம்  தேதி மூலம் தொழில் நிறுவனங்களுக்கு தரக்கூடிய ஆக்சிஜனை நிறுத்த உத்தரவிட்டுள்ளது.

இதனால் தொழில் நிறுவனங்கள் கடுமையான  பாதிப்பை சந்தித்து வருகின்றன. ஜாப் ஆர்டர்கள் மூலம் இந்த பணியை மேற்கொண்டால்தான் சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள்  தங்களது உற்பத்தி செய்யும் பொருட்கள் பெறமுடியும்.

கொரோனா முதலாவது முழு ஊரடங்கு, மூலப்பொருட்கள் விலை உயர்வு, தொழிலாளர்கள் பற்றாக்குறை என பல்வேறு இன்னல்களை தொழில்  முனைவோர்கள் சந்தித்து தற்போதுதான் மீண்டு வருகிறார்கள். இப்போது, ஆக்சிஜன் நிறுத்தம் முற்றிலும் தொழிலை முடக்கும் நிலை உள்ளது.  மனித உயிர்களை காப்பாற்றுவது மிகவும் முக்கியம். அதில் எந்த சமரசமும் இல்லை. அதே சமயம் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கக்கூடிய  ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனங்களால் மருத்துவ தேவைகளுக்கு வழங்கக்கூடிய ஆக்சிஜனை பெரிய அளவில் தயாரிக்க முடியாது.

உதாரணத்திற்கு 15 டன் ஆக்சிஜன் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கக்கூடிய நிலையில் அந்த ஆக்சிஜனை மீண்டும் தொழில்நுட்ப ரீதியாக  மாற்றம் செய்தால்தான் மருத்துவ தேவைகளுக்கு அதில் இருந்து 5 டன் ஆக்சிஜன் வழங்க முடியும். எனவே மருத்துவ தேவைகள் போக 20  அல்லது 30 சதவீதம் ஆக்சிஜனை தொழில் நிறுவனங்களுக்கு தந்து தொழில்கள் முடங்காமல் இருக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.   இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: