கண்ட கண்ட இடத்தில் கியூஆர் கோட் ஸ்கேன் செய்தால் பணம் போய்டும்: ஸ்டேட் பாங்க் எச்சரிக்கை

புதுடெல்லி: ‘பணம் செலுத்த வேண்டிய இடங்கள் தவிர வேறு எங்கேயும் க்யூஆர் கோட் ஸ்கேன் செய்யாதீர்கள்,’ என்று ஸ்டேட் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று அதிகரித்து இருப்பதால், ஆன்லைன் வர்த்தகம் மற்றும் ஆன்லைன் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை கடந்த காலங்களை காட்டிலும் தற்போது அதிகரித்துள்ளது. இதுபோன்ற இக்கட்டான கால கட்டத்திலும் சில கும்பல்கள் மக்களிடம் பண மோசடியில் ஈடுபடுவதற்கு முயற்சிப்பதாக ஸ்டேட் வங்கி எச்சரித்துள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் மிகுந்த கவனமுடன் இருக்கும்படி ஸ்டேட் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. பணம் செலுத்துவதற்கு தவிர வேறு எதற்காகவும் க்யூஆர் கோடை பயன்படுத்த வேண்டாம் என்று வாடிக்கையாளர்களை அது எச்சரித்துள்ளது.

இது தொடர்பாக இரண்டரை நிமிடங்கள் ஓடக்கூடிய வீடியோ ஒன்றை ஸ்டேட் வங்கி வெளியிட்டுள்ளது. இதில், வங்கி கணக்கில் இருந்து எவ்வாறு பணம் மோசடி செய்யப்படுகிறது என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. ‘பணம் செலுத்துவதற்காக மட்டுமே க்யூஆர் கோட் பயன்படுத்த வேண்டும். பணத்தை பெறுவதற்காக அதை பயன்படுத்த வேண்டாம், சிலர் க்யூஆர் கோட் ஸ்கேன்  செய்தால் பணம் வரும் எனக்கூறி, உங்களின் கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் எடுத்து விடுவார்கள். எனவே, க்யூஆர் கோட் ஸ்கேன் செய்யும்போது எச்சரிக்கையுடன் இருங்கள்,’ என்று அதில் எச்சரிக்கப்பட்டு உள்ளது.

Related Stories: