சொத்து பறிமுதலை தொடர்ந்து 2வது மிரட்டல் ஆக்சிஜன் பற்றி புரளி கிளப்பினால் தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும்: டாக்டர்களுக்கு உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

ராம்பூர்: உத்தர பிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக புரளியை கிளப்பும் டாக்டர்கள், ஊழியர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்துள்ளார். நாட்டில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் உத்தர பிரதேசமும் ஒன்று. இங்கு தினமும் பல நூறு பேர் இறந்து வருகின்றனர். இதனால், காஜியாபாத் உள்ளிட்ட இடங்களில் மயானத்தில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைகள் அனைத்தும் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கை வசதி, உயிர் காக்கும் மருந்துகள போன்றவற்றுக்கு பற்றாக்குறை ஏற்பட்டு இருப்பதாக பரவலாக குற்றச்சாட்டு உள்ளது.

ஆனால், இம்மாநில முதல்வர் யோகி ஆதித்யாநாத் இதை மறுத்து வருகிறார். இதுபோன்ற புரளிகளை கிளப்புபவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும் என சில நாட்களுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார். அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருப்பதாக டாக்டர்கள் கூறி வருவதாக நேற்று அவருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதையடுத்து, இதுபோன்ற பொய் தகவலை பரப்பும் டாக்டர்கள், மருத்துவ ஊழியர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் நேற்று எச்சரிக்கை விடுத்தார். யோகி அடுத்தடுத்து விடுக்கும் இந்த எச்சரிக்கைகள், உத்தர பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

Related Stories: