ஆந்திராவில் தமிழக போலீஸ் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு!: கஞ்சா வியாபாரியை பிடிக்க சென்றபோது விபரீதம்..!!

ஹைதராபாத்: கஞ்சா கடத்தல் மன்னனை பிடிக்க ஆந்திர மாநிலத்திற்கு சென்ற தமிழக காவல்துறையினர் மீது நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டதில் 2 பேர் காயமடைந்துள்ளனர். சென்னையில் பல்வேறு பகுதிகளுக்கு கஞ்சா விநியோகம் செய்யும் ஹரி என்பவர் ஆந்திர மாநிலம் தடாவில் பதுங்கி இருப்பதாக நேற்று இரவு மதுரவாயல் சட்டம் ஒழுங்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் சுதாகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மேலதிகாரிகளுக்கு தகவல் தராமல் 2 காவலர்கள் மற்றும் 3 ஊர்காவல்படை வீரர்களுடன் கை துப்பாக்கியை எடுத்துக்கொண்டு தனியார் வாகனத்தில் உதவி ஆய்வாளர் சுதாகர் ஆந்திராவுக்கு சென்றுள்ளார். 

இன்று காலை சூலூர்பேட்டையில் உள்ள வீடு ஒன்றில் கூட்டாளிகளுடன் ஹரி இருப்பதை அறிந்த தமிழக காவல்துறையினர் அவர்களை சுற்றி வளைத்தனர். அப்போது திடீரென ஹரியும், கூட்டாளிகளும் காவலர்களை நோக்கி நாட்டு வெடிகுண்டுகளை வீசினர். இதில் உதவி ஆய்வாளர் சுதாகர், காவலர் வெயில்முத்து ஆகியோர் காயமடைந்தனர். ஆனால் ஆந்திராவில் சிகிச்சை பெறாமல் சென்னை வந்த அவர்கள் மதுரவாயல் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளனர். 

இத்தனை பரபரப்பிலும் கஞ்சா வியாபாரி ஹரியின் கூட்டாளிகளான நரேஷ், டில்லி, முரளி ஆகியோரை அவர்கள் கைது செய்து சென்னை அழைத்து வந்துள்ளனர். இருப்பினும் தகவல் தராமல் துப்பாக்கியுடன் ஆந்திரா சென்றது குறித்து தமிழக காவல்துறை உயரதிகாரிகள் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories: