கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவர் சிறப்பு மையம் தொடக்கம்: மருத்துவர் சீட்டு, ஆதார் எண், கொரோனா சான்றிதழ் கட்டாயம்

சென்னை: ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாட்டை போக்குவதற்கு தமிழக சுகாதாரத்துறை, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் நேற்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். தொற்றை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில் கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் என்ற மருந்து பயனளிக்கிறது. இதனால் பெரும்பாலான கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவர் மருந்தை டாக்டர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர். இதில், தனியார் மருத்துவமனைகளில் மருந்து இல்லை என்றாலும் டாக்டர்கள் பரிந்துரை செய்து வெளியே இருந்து வாங்கி வரும்படி நோயாளிகளின் உறவினர்களிடம் தெரிவித்தனர். இதனால் டாக்டர்களின் பரிந்துரை சீட்டை வைத்து கொண்டு நோயாளிகளின் உறவினர்கள் தெரு தெருவாக அலைவதாகவும், மருந்துகள் தட்டுப்பாட்டை பயன்படுத்தி கள்ளச்சந்தையில் கூடுதல் விலைக்கு விற்பதாக தொடர்ந்து புகார்கள் வந்துள்ளது.

இதையடுத்து  தமிழக சுகாதாரத்துறை மற்றும் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் சிறப்பு மையம் நேற்று சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தொடங்கப்பட்டது. இந்த மையத்தில் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான ரெம்டெசிவர் மருந்துகள் விற்பனை செய்யப்படுகிறது. ரெம்சிடெவர் மருந்து தேவைப்படுவர்கள் மருத்துவரின் பரிந்துரை சீட்டு, கொரோனா தொற்றுக்கான சான்றிதழ், ஆதார் கார்டு எண் போன்றவை காண்பித்து, 1560 விலையுள்ள ரெம்டெசிவர் மருந்தை பெற்றுக் கொள்ளலாம். சென்னையில் முதற்கட்டமாக இதற்கான மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் விரைவில் தமிழ்நாடு முழுவதும் செயல்பாட்டிற்கு வர உள்ளது. இதன் மூலம் ரெம்டெசிவிர் மருந்துகள் நேரடியாக நோயாளிகளுக்கே சென்று பயனடையும். கள்ளச்சந்தையில் விற்பனை செய்வதும், கூடுதல் விலைக்கு விற்பதும், பதுக்குதலை தடுக்கவும் முடியும். தொடர்ந்து இந்த சிறப்பு மையம் மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: