நலத்திட்டங்களில் மக்கள் பிரதிநிதிகள் பெயரை குறிப்பிடத் தேவையில்லை: ஐகோர்ட் கிளை கருத்து

மதுரை: நலத்திட்டங்களில் மக்கள் பிரதிநிதிகளின் பெயர்களை குறிப்பிடத் தேவையில்லை என ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. சிவகங்கையைச் சேர்ந்த மனோகரன் என்பவர் தர்மர் கோயில் தெருவிலுள்ள ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் விசாரித்தனர். அப்போது சிவகங்கை நகராட்சி தரப்பில், குறிப்பிட்ட இடத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தண்ணீர் வழங்குவதற்காகத்தான் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: தண்ணீர் தொட்டியில் சிவகங்கை நகராட்சி தலைவராக இருந்த அர்ஜூணன் பெயர் பெரிய அளவில் எழுதப்பட்டுள்ளது. நகராட்சி தலைவர் என்பவர் பொதுமக்களால் தேர்வு செய்யப்பட்டவர். அவர் தனது பெயரை மக்களுக்கான நலத்திட்டங்களில் குறிப்பிட்டுள்ளார். இப்படி பெயர்களை எழுதத் தேவையில்லை. நகராட்சி தலைவர் என்பவர் மக்களுக்கான பணிகள் மூலம் தனது பெயரை நிலை நிறுத்தி மக்களிடம் தனது செல்வாக்கைப் பெற வேண்டும்.

எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆக்கிரமிப்பிலுள்ள தண்ணீர் தொட்டியை ஆட்சேபனை இல்லாத வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். தண்ணீர் தொட்டி வைப்பதற்காக கட்டப்பட்ட சிமென்ட் தளத்தை அகற்ற வேண்டும். இது தொடர்பான நடவடிக்கையை 4 வாரத்தில் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: