திருமுல்லைவாயலில் சடலங்கள் எரியும்போது மேலெழும்பும் நச்சு புகை: சுற்றுச்சூழல் பாதிப்பால் அவதி

ஆவடி: ஆவடி அருகே திருமுல்லைவாயல்-சோழம்பேடு சாலையில் ஒரு எரிவாயு தகன மேடை உள்ளது. இது, கடந்த 13 ஆண்டுகளுக்கு முன் ஆவடி நகராட்சியால் கட்டப்பட்டது. இங்கு திருமுல்லைவாயல், அண்ணனூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சடலங்களை கொண்டு வந்து எரியூட்டி செல்கின்றனர். காலப்போக்கில் இந்த எரிவாயு தகனமேடையை ஆவடி நகராட்சி முறையாக பராமரிக்காமல் விட்டுவிட்டது. தற்போது இதன் பராமரிப்பை தனியாரிடம் ஆவடி மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. அவர்களும் எரிவாயு தகனமேடையை முறையாக பராமரிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் முறையான பராமரிப்பின்றி இருக்கும் எரிவாயு தகனமேடையில் சடலங்களை எரிக்கும்போது, அதிகளவு நச்சு புகையும் துர்நாற்றமும் வீசி வருகிறது.

இதனால் இப்பகுதியை சுற்றியுள்ள வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, இந்திரா நகர், சாந்திபுரம், வைஷ்ணவி நகர் உள்ளிட்ட பகுதி மக்கள் கடும் மூச்சுத் திணறல் உள்பட பல்வேறு சுவாசக் கோளாறுகளால் அவதிப்பட்டு வருகின்றனர். இங்கு கொரோனாவினால் இறந்தவர்களின் சடலங்களும் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழலில் மாசுபடிந்துள்ளது. இதுகுறித்து ஆவடி மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும், இந்த எரிவாயு தகனமேடையை சீரமைப்பதில் அலட்சியம் காட்டி வருகின்றனர். எனவே, இந்த எரிவாயு தகனமேடையை சீரமைத்து, திருமுல்லைவாயல் பகுதியில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: