தெரியாம எடுத்துட்டேன்..! மன்னிச்சுக்கோங்க..! தடுப்பூசி என தெரியாது: திருடிய கொரோனா தடுப்பூசிகளை கடிதத்துடன் திருப்பி வைத்து சென்ற திருடன்

ஜிந்த்நகர்: ஹரியானா அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசிகளை திருடிய நபர், அதனை காவல் நிலையத்திற்கு அருகே கடிதத்துடன் விட்டுச்சென்றார். இந்தியா முழுவதும் கொரோனா 2வது அலை கொடூரமாக பரவி வருகிறது. மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிவதால் சிகிச்சைக்கு படுக்கை கிடைக்காமலும், உயிர்க்காக்கும் ஆக்ஸிஜன் கிடைக்காமலும் அலைந்து வருகின்றனர். இதனிடையே, சில பகுதிகளில் கொரோனா சிகிச்சைக்கு கொடுக்கப்படும் தடுப்பு மருந்துகள் கள்ளச்சந்தையில் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாகவும் புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக, ரெம்டெசிவிர் மருந்துகள் திருடப்பட்டு வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகின. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் ஹரியானாவில் ஒரு வித்தியாசமான சம்பவம் அரங்கேறியுள்ளது.  ஹரியானா மாநிலம் ஜிந்த் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த 1,270 டோஸ் கோவிஷீல்டு மற்றும் 440 கோவாக்சின் தடுப்பூசிகள் திருடுப்போனதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், ஜிந்த் காவல்நிலையத்தின் வெளியே உள்ளே டீக்கடையில் ஒரு பாலித்தீன் பை ஒன்று கிடந்தது.

காவல்துறையினர் அதனை திறந்து பார்த்தபோது, அதில் ஏராளமான கொரோனா தடுப்பூசிகள் இருப்பது தெரியவந்தது. அதனுடன் இருந்த குறிப்பில், மன்னித்துவிடுங்கள், மருத்துவமனையில் நான் திருடியது கொரோனா தடுப்பூசி என்று தெரியாது என எழுதப்பட்டிருந்தது. கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துவரும் சூழலில், மருந்து தட்டுப்பாடு, ஆக்சிஜன் தட்டுப்பாடு, தடுப்பூசி விலையேற்றம், ஆக்சிஜன் வேறு மாநிலங்களுக்கு திருப்பப்படுதல் என்று பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருவது மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>