கொரோனாவால் வெளிநாடு, வௌிமாநில ஆர்டர்கள் போச்சு; பனை ஓலை பொருட்கள் தேக்கம்: வறுமையில் வாடும் ராமநாதபுரம் மாவட்டத் தொழிலாளர்கள்

சாயல்குடி: கொரோனா பாதிப்பு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பனை ஓலை பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாமல் தேக்கமடைந்துள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் விவசாயம், மீன்பிடி தொழிலுக்கு அடுத்தபடியாக பனைமர தொழில் முக்கிய வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. மாவட்டத்தில் சுமார் 15 லட்சத்திற்கு அதிகமான பனை மரங்கள் உள்ளன. சுமார் 2 லட்சம் குடும்பங்கள் பனை மரம் மற்றும் பனைமரம் சார்ந்த உபதொழில் செய்து வருகின்றனர். சாயல்குடி, கன்னிராஜபுரம் தொடங்கி திருப்புல்லாணி, உச்சிப்புளி, ராமேஸ்வரம், தொண்டி வரையிலும் இத்தொழில் நடந்து வருகிறது.

பனை ஓலை, பனை நார் மூலம் மகளிர் குழுவினர் ஏராளமான கைவினை பொருட்கள் தயாரிக்கின்றனர். பனைஓலை மாலைகள், அலங்கார தோரணங்கள், பெண்களை கவரக்கூடிய தோடு, வளையல், கழுத்து அணிகலன்கள், மணி பர்ஸ்கள், ஹேண்ட் பேக், குழந்தைகளை மகிழ்விக்கும் கிலுகிலுப்பை உள்ளிட்ட விளையாட்டு பொருட்கள், பனை ஓலை பெட்டிகள், பார்சல் கொட்டான், வண்ணவிசிறி போன்றவை தயாரிக்கப்படுகின்றன. இந்த பொருட்கள் தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா, மணிப்பூர் உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும், அமெரிக்கா, தாய்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

தற்போது நாட்டில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக உள்நாடு சரக்கு போக்குவரத்து, வெளிநாடு சரக்கு விமான போக்குவரத்து முடங்கியுள்ளது. இந்தப் பொருட்களை கொள்முதல் செய்யும் ஏஜென்ட்களும் வரவில்லை. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் தயாரிக்கப்பட்ட பனை ஓலை பொருட்கள் விற்பனைக்கு செல்லாமல் தேக்கமடைந்துள்ளன. இதன் காரணமாக தொழிலாளர்கள் வருமானம் இன்றி வறுமையில் வாடுகின்றனர். இதுகுறித்து மொங்கான்வலசை, மொத்திவலசை மகளிர் குழுவினர் கூறும்போது, ‘‘ராமநாதபுரம் மாவட்ட பனை ஓலை பொருட்களுக்கு வெளிநாடுகளில் நல்ல வரவேற்பு இருந்தது.

இதனால் மகளிர் குழு ஒன்றிற்கு மாதம் ரூ.70 ஆயிரம் முதல் ரூ.80 ஆயிரம் வரை வருமானம் வந்தது. கொரோனா தாக்கத்தால் ஒரு மாதமாக கைவினை பொருட்களை வாங்குவதற்கு மொத்த வியாபாரிகள், சில்லரை வியாபாரிகள், வெளிமாநிலம், வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் ஏஜென்ட்கள் வரவில்லை. இதனால் தொழில் முடங்கி வறுமையில் தவிக்கிறோம்’’ என்றனர்.

‘நலவாரியம் வேண்டும்’

தொழிலாளர்கள் கூறுகையில், ‘‘தமிழக அரசு பனைமர தொழிலாளர் நலவாரியம் அமைக்க வேண்டும். கருப்பட்டி முதல் பனை ஓலை பொருட்கள் வரை கட்டுப்படியாகும் விலையை நிர்ணயம் செய்து அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும். பெண்களுக்கு மகளிர் சுய உதவிகுழுக்கள் மூலம் கடன் வழங்கி, பயிற்சி அளித்து பனை பொருள் தயாரிப்பு, விற்பனையை ஊக்குவிக்க வேண்டும். கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் வருவாய்க்கு உதவி செய்ய வேண்டும்’’ என்றனர்.

Related Stories: