ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரம் கடத்த முயன்றதாக தமிழகத்தை சேர்ந்த 8 பேர் கைது!: ரூ.10 லட்சம் மதிப்புள்ள செம்மரக்கட்டை பறிமுதல்..!!

ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் கடப்பாவில் செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாக தமிழகத்தை சேர்ந்த 8 கூலி தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் கட்டிகோட்டா என்ற இடத்தில் வன அதிகாரிகள் ரோந்து சென்றனர். அப்போது வன அதிகாரிகளை கண்டதும் அங்கிருந்த கூலி தொழிலாளிகள் தப்பி ஓடினர். அவர்களில் தமிழகத்தை சேர்ந்த 8 பேரை சுற்றிவளைத்து வன அதிகாரிகள் கைது செய்துள்ளதாகவும், 10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 16 செம்மர கட்டைகளை பறிமுதல் செய்துள்ளதாகவும் மாவட்ட வன அதிகாரி ரவீந்திரா கூறியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வன அதிகாரி, செம்மரம் வெட்டி கடத்த முயன்றதாக முதலில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அளித்த தகவலின் பேரில் மேலும் 3 பேர் என மொத்தம் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கடத்தலில் மொத்தம் 16 பேர் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. 550 கிலோ செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவற்றின் மதிப்பு 10 லட்சம் ரூபாய் ஆகும். கடத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் அனைவரும் சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது. தப்பியோடிய 8 பேரை தீவிரமாக தேடி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>