கடை உரிமையாளரை தாக்கிய வழக்கில் போலீசில் சரணடைய சென்ற வாலிபர் அடித்து கொலை: நண்பர்கள் 4 பேர் கைது

தண்டையார்பேட்டை: எண்ணூர் தாழங்குப்பத்தை சேர்ந்தவர் அப்புனு (எ) செல்வகுமார்(24), எண்ணூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவரும் இவருடைய நண்பர்கள் அதே பகுதியை சேர்ந்த முத்தமிழன்(23), ராயபுரம் ஜி.எம்.பேட்டையை சேர்ந்த தினேஷ்(25), தாழங்குப்பத்தை சேர்ந்த ஸ்ரீதர்(27), ராயபுரம் மேற்கு மாதா கோயில் தெருவை சேர்ந்த நிசாந்தன்(25) ஆகியோர் கடந்த 14ம் தேதி எண்ணூர் ஆர்.எஸ்.சாலையில் கடை நடத்தி வரும் லோகேஷ் என்பவரிடம் ட்ரில்லிங் மிஷின் வாடகைக்கு கேட்டனர். அவர் தர மறுத்ததால் தகராறில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து லோகேஷ் எண்ணூர் போலீசில் புகாரளித்தார்.

இதையறிந்த 5 பேரும் அங்கிருந்து தலைமறைவாகி கடந்த 15ம் தேதி காசிமேடு வந்து ஜீரோ கேட் அருகே மது அருந்தினர். அப்போது அப்புனு போலீசில் சரணடைவதாக கூறினார். இதை நண்பர்கள் கண்டித்தனர். இதனால் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதில் கட்டையால் தாக்கி மது பாட்டிலால் அவரது மண்டையில் அடித்து தொண்டையில் குத்தி அப்புனுவை கொலை செய்தனர். மேலும், அவரது உடலை கடற்கரை மணலில் புதைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதற்கிடையில், அப்புனு காணவில்லை என அவரது உறவினர்கள் தேடி வந்தனர். இந்நிலையில், அவரது நண்பர்கள் 4 பேரும் நேற்று மதியம் திருவொற்றியூர் நீதிமன்றத்தில் சரணடைய சென்றனர்.

அப்போது மீன்பிடித் துறைமுக போலீஸ் இன்ஸ்பெக்டர் வினோத்குமார் 4 பேரையும் சுற்றிவளைத்து கைது செய்தார். பின்னர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினார். அதில் அப்புனுவை கொலை செய்ததை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து அப்புனுவை கொலை செய்து புதைத்த இடத்தில் போலீசார் சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவர்களிடம் மேலும், விசாரிக்கின்றனர்.

Related Stories:

>