கொரோனா பரவலை கட்டுப்படுத்த 23ல் அமல்..! புதுச்சேரியில் சனி, ஞாயிறு முழு ஊரடங்கு

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான உயர்நிலைக்கூட்டம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ராஜ்நிவாசில் நேற்று நடந்தது. கவர்னரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, மகேஸ்வரி, தலைமை செயலர் அஸ்வனிகுமார்,  மாவட்ட ஆட்சியர் பூர்வா கார்க் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இது குறித்து கவர்னர் அலுவலகம் நேற்றிரவு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுச்சேரி முழுவதும் வரும் 23ம் தேதி தொடங்கி வெள்ளிக்கிழமை இரவு முதல் திங்கட்கிழமை காலை வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

ஒவ்வொரு வாரமும் தொடரும். மற்ற நாட்களில் கடைகள், அங்காடிகள் பகல் 2 மணி வரை மட்டுமே இயங்கும். பகல் 2 மணிக்கு பிறகு உணவு விடுதிகளில் இருந்து உணவு எடுத்து செல்ல மட்டும் அனுமதிக்கப்படும். திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே மக்கள் அனுமதிக்கப்படுவர். வழிபாட்டு தலங்களில் ஊர்வலங்கள், தேரோட்டங்கள் போன்றவை தடை செய்யப்படுகிறது. கொரோனா வழிமுறைகளோடு வழிபாடு அனுமதிக்கப்படும். பாண்லே கடைகள் மூலம் குறைந்த விலையில் முகக்கவசம் மற்றும் கிருமிநாசினி நாளை (இன்று) முதல் வழங்கப்படும்.

மருத்துவமனைகளில் படுக்கைகள் அதிகரிக்கப்படும். தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கான வயது 18 ஆக குறைக்கப்பட்டுள்ளதால் தேவையான அளவு தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்படும். ஆர்டிபிசிஆர் கொரோனா பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு, பரிசோதனை முடிவுகள் விரைவுபடுத்தப்படும்.  மருத்துவமனைகளில் பிராணவாயு (ஆக்சிஜன்) இணைப்புகளை முறைப்படுத்தவும், போதிய இருப்பை உறுதி செய்யவும், மருத்துவமனைகளுக்கு தொழிற்சாலைகள் பிராணவாயு வழங்குவதை ஒழுங்குபடுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மருத்துவப் பணியாளர்களை சுழற்சி முறையில் பணியமர்த்தவும் நடவடிக்கை எடுக்கப்படும்.  கபசுர குடிநீர் வழங்குவது உள்ளிட்ட இந்திய மருத்துவ வழிமுறைகள் ஊக்கப்படுத்தப்படும். ஆம்புலன்ஸ் ஊர்திகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: