கொரோனா பரவலை தடுக்க திருமண விழாவில் 100 பேருக்கு மட்டுமே அனுமதி-கவர்னர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு

புதுச்சேரி : புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா விதிகளை நடைமுறைப்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் ராஜ்நிவாசில் நேற்று நடந்தது. கவர்னரின் ஆலோசகர்கள் சந்திரமவுலி, மகேஸ்வரி, தலைமை செயலர் அஸ்வனிகுமார், வளர்ச்சி ஆணையர் சுந்தரவடிவேலு, ஏடிஜிபி ஆனந்தமோகன், கவர்னரின் செயலர் அபிஜித் விஜய் சவுத்ரி, சுகாதாரத்துறை செயலர் அருண், உள்ளாட்சித்துறை செயலர் வல்லவன், புதுச்சேரி கலெக்டர் பூர்வா கார்க் ஆகியோர் கலந்துகொண்டனர்.

காரைக்கால் மாவட்ட கலெக்டர் அர்ஜுன் சர்மா, மாகே-ஏனாம் மண்டல அதிகாரிகள் அமன் சர்மா, சிவராஜ் மீனா ஆகியோர் காணொலி காட்சி மூலம் கூட்டத்தில் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் வருமாறு:புதுச்சேரி மாநிலத்தில் உணவு விடுதிகள், மதுக்கடைகள் போன்ற இடங்களில் வாடிக்கையாளர்கள் அமர்வதற்கு தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும். வட்டார அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டு கோவிட் விதிகள் நடைமுறைப்படுத்தப்படும். ஒலிபெருக்கி வாகனங்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். உள்ளாட்சி அதிகாரிகள் கோவிட் விதிகளை செயல்படுத்த தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்கள் கோவிட் நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தேவைகளுக்கு ஏற்ப கோவிட் கட்டுப்பாட்டு மையங்கள் அமைக்க வேண்டும். சிறிய அளவிலான கட்டுப்பாட்டு பகுதிகள், மக்கள் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட வேண்டும். அடையாளம் கண்டறியப்பட்ட சிறிய அளவிலான கட்டுப்பாட்டு மண்டலங்களை மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு மண்டலங்களாக பிரித்து கோவிட் நடைமுறைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆஷா மற்றும் சுகாதார பணியாளர்கள் இவற்றை தினசரி அடிப்படையில் கண்காணித்து வழிகாட்டுதல்கள் வழங்க வேண்டும். திருமண விழாக்களில் 100 நபர்கள், இறுதி சடங்குகளில் 50 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். சமூக இடைவெளியை உறுதி செய்யும் வகையில் மக்கள் அதிகம் கூடும் சந்தைகளை விசாலமான இடங்களுக்கு மாற்ற வேண்டும். காரைக்கால் மாகே, ஏனாம் பகுதிகளில் அந்தந்த பகுதி ஆட்சியர், மண்டல அதிகாரிகள் தகுந்த முடிவெடுத்துக்கொள்ளலாம். இவ்வாறு முடிவெடுக்கப்பட்டது.

Related Stories: