வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் குழாய் பழுதால் 4 நோயாளிகள் பலி: கொரோனாவுக்கும் 3 பேர் உயிரிழப்பு

வேலூர்: வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் பைப்பில் ஏற்பட்ட பழுதால் சிகிச்சை பெற்று வந்த 4 நோயாளிகள் உயிரிழந்தனர். அதேபோல் கொரோனா பாதித்த 3 நோயாளிகளும் ஒரே நாளில் உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வேலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தினந்தோறும் 150க்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் அரசு, தனியார் மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது. போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க முடியாமல் டாக்டர்கள் திணறி வருகின்றனர். வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 250க்கும்  மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் பாதிப்பு அதிகமாக உள்ளவர்களை சிறப்பு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே

நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவு நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செல்லும் பைப் லைனில் திடீரென உடைப்பு ஏற்பட்டு ஆக்சிஜன் தடைபட்டது. இதனால் நோயாளிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். இதில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளி செல்வராஜ்(66), ராஜேஸ்வரி (68), பிரேம்(38) ஆகிய 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் அனைவரும் 2வது மாடியில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். அதேபோல் வேறு நோய்களுக்காக மற்றொரு வார்டில் பலர் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலத்தை சேர்ந்த ராஜேந்திரன்(52) என்பவர் மூச்சுத்திணறலுக்கு சிகிச்சை பெற்று வந்தார். திடீரென ஆக்சிஜன் தடைபட்டதால் இந்த வார்டில் ராஜேந்திரன், மதன், லீலாவதி (70), கபாலி (37) ஆகிய 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் மற்ற நோயாளிகளிடம் பெரும் பீதியை ஏற்படுத்தியது.

சில நோயாளிகள் கதறி அழுதனர். நோயாளிகளின் உறவினர்களும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் தான் இறந்துவிட்டதாக குற்றம்சாட்டினர். பின்னர் மாலை 4 மணியளவில் மீண்டும் ஆக்சிஜன் செயல்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து மற்ற நோயாளிகள் நிம்மதி அடைந்தனர். இருப்பினும் இந்த சம்பவம் கொரோனா நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் இடையே கடும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது, ‘‘ஆக்சிஜன் பற்றாக்குறையால் இவர்கள் இறக்கவில்லை. இறந்தவர்களில் 4 பேர் கொரோனா நோயாளிகள் இல்லை’’ என்று கூறினர்.

16 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் பிளான்ட்

மருத்துவமனை அதிகாரிகள் கூறுகையில், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 10 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் பிளான்ட் செயல்பட்டு வந்தது. கூடுதலாக 6 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் பிளான்ட் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சிறிய வகையான சிலிண்டர்களும் 200 இருப்பில் உள்ளது. நேற்று ஆக்சிஜன் பிளான்ட் மற்றும் பைப்லைன் சர்வீஸ் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். பராமரிப்பு பணியில் ஈடுபட்டபோதும் கூட ஆக்சிஜன் பைப் லைன் முழுவதுமாக இயங்கியது. ஆக்சிஜன் பற்றாக்குறையால் அவர்கள் இறக்கவில்லை என்று தெரிவித்தனர்.

Related Stories: