சுங்கத்துறை அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்தவர் கைது: ஹவாலா பணம் பரிவர்த்தனை செய்த இருவருக்கு வலை

தண்டையார்பேட்டை: வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு கொண்டு வரும் பொருட்களுக்கு உரிய வரி செலுத்தாமல் சில வியாபாரிகள் சட்டவிரோதமாக செயல்படுகின்றனர். இதனை தடுக்கும் விதமாக  மண்ணடி 2வது கடற்கரை சாலையில் உள்ள 3 கடைகளில் கடந்த மார்ச் 25ம் தேதி சுங்கத்துறை அதிகாரிகள்  சோதனையிட சென்றனர். அப்போது, 50க்கும் மேற்பட்ட நபர்கள் சுங்கத்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்து, அவர்களை தகாத வார்த்தைகளால் பேசியுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் வடக்கு கடற்கரை போலீசார், மேற்கண்ட கடைகளின் உரிமையாளர்கள் (சகோதரர்கள்) ராஜாமுகமது, சிக்கந்தர் உள்ளிட்டோர் மீது அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், மரியாதை இல்லாமல் பேசியது  உள்ளிட்ட 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய முகமது முகைதீன் என்பவரை வடக்கு கடற்கரை போலீசார்  கைது செய்தனர்.

தலைமறைவாக உள்ள கடை உரிமையாளர்கள் ராஜாமுகமது, சிக்கந்தர் இருவரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு ஹவாலா பணப்பரிவர்த்தனை செய்ததாக ராஜஸ்தான் மாநிலத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அவர்களை போலீசார் தேடி  வருகின்றனர்.

Related Stories:

>