ஓட்டலில் தங்க அறையும், சாப்பாடும் கிடையாது கொரோனா வார்டில் பணியாற்றும் நர்சுகளுக்கு அடிப்படை வசதி இல்லை

சேலம்: சேலத்தில் கொரோனா வார்டில் பணியாற்றும் நர்சுகள், தங்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை என புகார் கூறியுள்ளனர். கொரோனாவின் இரண்டாவது அலை மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதற்காக சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தற்போது 400க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் இருக்கிறார்கள். இங்கு இன்று (ஞாயிறு) முதல் நர்ஸ்களுக்கு 4 ஷிப்ட் முறை அமல்படுத்தப்படுகிறது. வழக்கமாக நர்சுகளுக்கு 3 ஷிப்ட் உண்டு.

தற்போது காலை 8 மணி முதல் பகல் 2 மணி வரையிலும், 2ல் இருந்து இரவு 8 மணி வரையிலும், 8 மணியில் இருந்து நள்ளிரவு 2 மணி வரையிலும், 2 மணியில் இருந்து காலை 8 மணி வரையிலும் என நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் ஷிப்டுக்கு 20 பேரும், மற்ற 3 ஷிப்ட்டுகளுக்கு தலா 10 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் கடந்த முறை நர்சுகளுக்கு செய்து கொடுத்த அடிப்படை வசதிகள் தற்போது கிடையாது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து விட்டது. கடந்த கொரோனாவின் போது 7 நாட்கள் வேலை செய்யும் போது, 7 நாட்கள் தனிமை யில் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்காக தனியார் ஓட்டலில் அறை ஒதுக்கப்பட்டது. 3 வேளையும் அவர்களுக்கு சத்தான உணவு வழங்கப்பட்டது. ஓய்வுக்கு பிறகு, கொரோனா பரிசோதனை செய்து, நோய் தொற்று இல்லை என ரிசல்ட் வந்ததும் வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். ஆனால் தற்போது ஓட்டலில் அறை ஒதுக்கப்படவில்லை. வேலை முடிந்ததும் அவர்களின் வீடுகளுக்கு சென்று சாப்பிட்ட கூறிவிட்டனர். இதனால் நர்சுகள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து நர்சுகள் கூறுகையில், ‘‘கொரோனா மிகவும் வேகமாக பரவும் நிலையில் எங்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்துகொடுக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர்.

வேலை முடிந்தவுடன் நாங்கள் வீடுகளுக்கு சென்று விட வேண்டும் என்கின்றனர். கொரோனா வார்டில் பணியாற்றி விட்டு அப்படியே வீட்டிற்கு சென்றால், வீட்டில் உள்ளவர்களுக்கு நோய் பரவாதா? பஸ்சில் செல்லும்போது பயணிகளுக்கு பரவாதா? அதிகாலை 2 மணிக்கு வேலை முடிந்து எப்படி வீட்டிற்கு செல்ல முடியும். இதையெல்லாம் அதிகாரிகள் புரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள். முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யவில்லை என்றால் பணியை புறக்கணிப்பதை தவிர வேறு வழியில்லை,’’  என்றனர்.

Related Stories:

>