கொரோனா தொற்று அதிகளவில் தாக்கியதால் உச்ச நீதிமன்ற ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள் அமல்: மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை

புதுடெல்லி: இரு தினங்களுக்கு முன் பல ஊழியர்களுக்கு கொரோனா உறுதியாகி இருந்த நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகள் கொண்ட வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் நேற்று வெளியிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் 47க்கும் மேலான ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாகவும், அதே போன்று சிலருக்கு அறிகுறி இருப்பதால் அவர்கள் அனைவரும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்கள் என்றும் நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தின் தரப்பில் கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து வழக்கு விசாரணைகள் அனைத்தையும் நீதிபதிகள் தங்களின் இல்லத்தில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடத்தி வருகின்றனர். அதே போன்று உச்ச நீதிமன்ற முழு வளாகமும் கிருமி நாசினி கொண்டு தினமும் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் தரப்பில் இருந்து நேற்று பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய வழிகாட்டு  நெறிமுறைகளை பின்பற்றக்கோரி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள விவரம் வருமாறு:

* உச்ச நீதிமன்றத்திற்கு வரும் ஊழியர்கள், பதிவாளர்கள், வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருந்தாலும் உடனடியாக பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும்.

* மீண்டும் அவர்கள் அலுவலகத்திற்கு வரும்போது ரேபிட் மற்றும் ஆர்டி.பி.சி.ஆர் பரிசோதனை செய்த நகலை காண்பிக்க வேண்டும். அதில்,நோய் தொற்று இல்லை என்பது உறுதியானால் தான் நீதிமன்றத்தின் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள்.

* இது, உச்ச நீதிமன்றத்தில் உள்ள அனைத்து வாயில்களிலும் இந்தமுறை கண்டிப்பாக பின்பற்றப்படும். அதில் எந்த மாற்றமும் கிடையாது.

* உச்ச நீதிமன்றத்தில் இருக்கும் அனைத்து அதிகாரிகளும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தங்களுடைய கட்டுப்பாட்டில் உள்ள ஊழியர்களும் அதனை கடைபிடிக்கிறார்களா என்பது குறித்து கண்கானிக்க வேண்டும்.

* அடிக்கடி கைகளை சோப்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

* காய்ச்சல், இருமல், உடல்வலி, வாசனை இழப்பு, வயிற்றுப்போக்கு ஆகிய அறிகுறிகளைக் கொண்ட ஊழியர்கள் தங்களுடைய அலுவலகம் மற்றும் வளாகங்களுக்கு வருவதை தடுக்க வேண்டும்.

* அப்படி வரும் நபர்களை உடனடியாக தனிமைப்படுத்தி மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தி ஆலோசனைகள் வழங்க வேண்டும்.

* நீதிமன்ற வளாகத்தில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.

* லிப்டில் ஒரே நேரத்தில் மூன்று நபர்கள் மட்டும்தான் செல்ல வேண்டும். இதற்கு அதிகமான நபர்கள் கண்டிப்பாக அதனை பயன்படுத்தக் கூடாது.

* கீழ் தளத்தில் இருந்து மேலே செல்ல மட்டும்தான் லிப்ட்டை உபயோகப்படுத்த வேண்டும். மீண்டும் கீழ் தளத்திற்கு வருவதற்கு படிக்கட்டுகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* இந்த வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றவில்லை என்றால் அவர்கள் மீது நீதிமன்ற சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: